அதிகரிக்கும் வெயிலால் சரிந்து வரும் அணைகளின் நீர்மட்டம்.. வெயில் தொடர்ந்தால் குடிநீருக்கு அல்லாடும் அபாயம்!!

அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் தேனி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவது மக்களை கவலை அடையச் செய்துள்ளது.

அதிகரிக்கும் வெயிலால் சரிந்து வரும் அணைகளின் நீர்மட்டம்.. வெயில் தொடர்ந்தால் குடிநீருக்கு அல்லாடும் அபாயம்!!

நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் மார்ச் மாதத்திலேயே தொடங்கி விட்ட நிலையில்,

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை, சண்முக நதி அணை, சுருளி அருவி போன்ற பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. உத்தமபாளையம் முல்லைப்பெரியாற்றில் தரைத்தளப் பாறை வெளியில் தெரியும் வகையில்தான் நீர் வரத்து உள்ளது.

152 அடி கொள்ளளவு கொண்ட  முல்லைப் பெரியாறு அணையில் தற்போதைய நீர்மட்டம் 125 அடியாக உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் சுரங்கம், மேடான பகுதியில் உள்ளதால் அணையில் 104 அடிக்கு மேல் நீர்மட்டம் இருந்தால் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும்.

ஆனால், வெயிலின் தாக்கம் அதிகரித்து நீர்மட்டம் குறைந்தால் குடிநீருக்காக அல்லாடும் நிலை உருவாகும் என அஞ்சும் பொதுமக்களும் விவசாயிகளும் ஜுன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழையை இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.