சி.விஜயபாஸ்கரும், சொத்து விவரங்களும்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சி.விஜயபாஸ்கரும், சொத்து விவரங்களும்..!

அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர், முறைகேட்டில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

அதில் 2013 முதல் 2021 வரை அவரது மனைவி ரம்யா பெயரில் சி.விஜயபாஸ்கர் சொத்துகள் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராசி புளூ மெட்டல்ஸ், கிரீன் லேண்ட் ஹை புரமோட்டர்ஸ், ஐரிஸ் ஈகோ பவர் வெஞ்சர், ராசி எண்டர்பிரைஸ், அன்யா எண்டர்பிரைஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் சி.விஜயபாஸ்கரும், அவரது குடும்பத்தினரும் பங்குதாரர்களாக இருப்பதுடன், அதில் சில நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தனக்கு 6 கோடியே 41 லட்சம் ரூபாய் சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். 

அதனை தொடர்ந்து 2016 ஆண்டுக்கு பின் 6 கோடியே 58 லட்சம் ரூபாயில் 7லாரிகள், ஜேசிபி எந்திரங்கள், 53 லட்சம் ரூபாயில் பி. எம்.டபள்யூ கார், 

40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், 3.99 கோடி ரூபாய் மதிப்பில் விவசாயநிலங்கள், 14 கோடியில் சென்னையில் வீடு, 28 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 57.77 கோடி ரூபாய் என்றும், இதன் மூலம் வருமானத்திற்கு அதிகமாக 27கோடியே 22 லட்சத்து 56ஆயிரத்து  736 ரூபாய் சொத்து குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். 

முறைகேடு செய்த பணத்தில் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் மதர் தெரசா என்ற பெயரில் டிரஸ்ட் மற்றும் கல்வி நிலையங்களை நடத்தி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.