பாக்கெட் சாராய விற்பனையை நிறுத்த சொன்ன மக்கள்...அலட்சியமாக பதில் கூறிய வியாபாரியின் வீடியோ வைரல்!!

சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாக்கெட் சாராய விற்பனையை நிறுத்த சொன்ன மக்களிடம், காவல்துறையிடம் சொல்லிவிட்டு விற்பனையை நிறுத்துவதாக வியாபாரி கூறும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பாக்கெட் சாராய விற்பனையை நிறுத்த சொன்ன மக்கள்...அலட்சியமாக பதில் கூறிய வியாபாரியின் வீடியோ வைரல்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் கொள்ளிடம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாராய விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தங்குதடையின்றி தாராளமாக 24 மணிநேரமும் விற்பனை செய்யப்படும்  இந்த சாராயத்திற்கு குடிமகன்கள் அடிமையாகி உயிரைவிடுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், சீர்காழி அருகே ஓதவந்தான்குடி கிராமத்தில் சாராயத்தை குடித்த ஒருவர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாராய வியாபாரியை சுற்றி வளைத்து விற்பனையை கைவிட வலியுறுத்தினர். அதற்கு, காவல்துறை வரும் போது அவர்களிடம் சொல்லிவிட்டு அதன்பின்னர் சாராய விற்பனையை நிறுத்துவதாக விற்பனையாளர் கலியன் கூறியுள்ளார். 


அத்துடன், தொடர்ந்து வீட்டில் வைத்தே பாக்கெட் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு சில காவல் துறை அதிகாரிகளை பயன்படுத்திக்கொண்டு, தொடர்ந்து சாராய விற்பனையை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். விஷச் சாராய விற்பனையை அடியோடு நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகமும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழி சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.