அப்பப்பா என்னா பேச்சு, என்னா ஒரு விளக்கம்... ஸ்டாலினை வாய் வலிக்க புகழ்ந்து தள்ளும் வீரமணி!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையை புகழ்ந்து கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அப்பப்பா என்னா பேச்சு, என்னா ஒரு விளக்கம்... ஸ்டாலினை வாய் வலிக்க புகழ்ந்து தள்ளும் வீரமணி!!
‘‘சமூகநீதி, சுயமரியாதை, மொழி, இனப்பற்று - மாநில உரிமை இந்நான்கு பலத்தாலும்தான் தி. மு.க. நிற்கிறது! ஆளுநர் உரை என்பது ஆட்சியின் நெறிபற்றிய அறிவிப்பே - வாக்குறுதிகளை செய்து முடித்ததை வர்ணிப்பதல்ல! முதலமைச்சரின் சட்டமன்ற உரை - அரசியல் விளக்க உரையாகும்! வாக்குறுதிகளை இவ்வாட்சி உறுதியாக நிறைவேற்றும்! என கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை - திராவிட இயக்க வரலாற்றில் மட்டுமல்ல - மக்களாட்சியின் மாண்புகளை விளக்கும் அரசியல்  விளக்கவுரை என்றும், தி. மு.க. ஆட்சியின் கொள்கை என்பது சமூகநீதி, சுயமரியாதை, மொழி, இனப்பற்று - மாநில உரிமை என்று பிரகடனப்படுத்தியது மிகச் சிறப்பானது என்றும் - பாராட்டியதோடு, தி. மு.க. அளித்த வாக்குறுதிகளை உறுதியாக இவ்வாட்சி நிறைவேற்றும் என்றும்  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில்;  புதிய தி. மு.க. ஆட்சியில் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகிய பின் - தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடந்துள்ளது.
 
அதனைத் தொடங்கி தி. மு.க. ஆட்சியின் கொள்கைப் பிரகடனங்களின் வெளியீடாக ஆளுநர் உரை அமைந்து, சிறந்த வரவேற்பை, பொதுமக்களிடமிருந்தும், அறிஞர் பெருமக்களிடமிருந்தும் பெற்றது.
 
மக்களாட்சியின் மாண்புகளை விளக்கும் அரசியல் விளக்கவுரை அதன்மீது 3 நாள்கள் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களுக்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (24.6.2021) சுமார் 45 நிமிடங்கள் ஆற்றிய உரை, திராவிட இயக்க வரலாற்றில் மட்டுமல்ல, மக்களாட்சியின் மாண்புகளை விளக்கும் அரசியல் விளக்கவுரையாகவும் அமைந்தது!
 
ஆளுநர் உரை என்பது ஆட்சியின் நெறிபற்றிய அறிவிப்பே தவிர,  வாக்குறுதிகளையெல்லாம் செய்து முடித்ததை வர்ணிப்பதாகாது என்ற விளக்கம் எளியவர்களுக்கும் புரியக் கூடிய விளக்கம்!
 
தி. மு.க. ஆட்சியின் பலம்பற்றி எதிர்க்கட்சித் தலைவரின் உவமையையே பயன்படுத்தி, உறுதிபடக் கூறியது நயத்தக்க நாகரிகம் ஆகும்!
 
ஆளுநர் உரை குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், ‘‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பார்கள்; இந்த அறிக்கையில் மணியோசையும் இல்லை. யானையும் இல்லை’’ என்று சொன்னார்கள்.
 
ஆணித்தரமான பதில் வெல்லும் சொல்லாகும்!
 
‘யானை’ என்று சொன்னதற்காகப் பாராட்டுகிறேன். அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள். தி. மு.க. என்பது யாராலும் அடக்க முடியாத யானை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான்கு கால்கள்தான் யானையின் பலம். 1. சமூகநீதி 2. சுயமரியாதை 3. மொழி 4. இனப்பற்று - மாநில உரிமை ஆகிய நான்கின் பலத்தில்தான் தி. மு.க.வும் நிற்கிறது. இந்த அரசும் நிற்கிறது. இந்த ஆளுநர் உரையைப் படிப்பவர் கண்களுக்கு சமூகநீதியும், சுயமரியாதையும், தமிழுக்கும், தமிழர்க்கும் நாங்கள் செய்யவிருக்கும் நன்மைகளும், மாநில உரிமைகளுக்கான எங்கள் முழக்கங்களும் நிச்சயம் தெரியும்‘’ என்ற ஆணித்தரமான பதில் வெல்லும் சொல்லாகும்!
 
ஏற்கெனவே பதவியேற்கும்போதே, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், 4000 ரூபாய் இரண்டு தவணைகளில், பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் எனக் குறைப்பு எனத் தொடங்கி, 50 நாள்கள் ஆட்சி காணும் முன்பே தொடர் மழையென சாதனை அறிவிப்புகள், சரித்திரத்தின் பக்கங்களை நிரப்புவதாக நாளும் அமைகின்றன!
 
இந்தப் பதிலுரையிலே அய்ந்து முக்கிய அறிவிப்புகள் அனைத்துத் தரப்பு - கட்சிகள் - மகிழ்ச்சி அடையச் செய்யும் அறிவிப்புகள் ஆகும். தி. மு.க. ஆட்சி என்ற நல்லாட்சியின் ஒளி வீச்சுகளாக விளங்குகின்றன.
 
சிறப்பு சிகிச்சை மய்யங்கள்!
 
1.கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து, மீண்டும் பாதிக்கப்பட்டு சிக்கலான உடல்நலக் குறைவினை சந்திப்பவர்களுக்குத் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தொடர் சிகிச்சை அளிக்கும் சிறப்பு சிகிச்சை மய்யங்கள் ஆக செயல்படும் உயிர் காக்கும் அறிவிப்புகள்.
 
2. பெண்களும், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் - பின்தங்கிய வட மாவட்டங்களான திண்டிவனம், செய்யாறு பகுதிகளில் (செய்யாறில் 12,000 பேர், திண்டிவனத்தில் 10,000 பேர்) வேலை வாய்ப்புத் தரக்கூடிய தொழிற்சாலைகள் அமைத்தல்.
 
3. முந்தைய அரசில் உழவர்கள்மீதும், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகவும், வேளாண் சட்டங்கள், குடியுரிமைச் சட்டங்கள், மீத்தேன், நியூட்ரினோ, கூடங்குளம், சேலம் 8 வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய அத்துணை பேர்மீதும் போடப்பட்ட வழக்குகள் வாபஸ்.
 
4. சீர்குலைந்த நிலையிலும், செயல் மாறிய வடிவிலும் ஆன ஜாதி - தீண்டாமை ஒழிப்பு லட்சியங்களை நடை முறைப்படுத்தி கலைஞர் அரசு எடுத்துக்காட்டான சாதனை புரிந்து அமைந்த பெரியார் சமத்துவபுரங்களை திட்டமிட்டே பராமரிப்பின்றி விடப்பட்ட நிலையை மாற்றிட, 240 பெரியார் சமத்துவபுரங்களை சீரமைத்தும், புதிதாக மேலும் பல சமத்துவபுரங்களை உருவாக்கவுமான திட்ட அறிவிப்பு.
 
5. பக்தர்கள் மகிழ்ச்சியடைக் கூடிய வகையில் கோவில்களுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
ஒளிவு மறைவுமில்லாத உண்மையின் வீச்சு! இப்படி சாதனை மழை தொடர் மழையாக மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பொழிந்துகொண்டே உள்ளது. இவ்வாட்சிபற்றி அவர் தனது பதிலுரையில் தந்தது தொடக்க மும், ஒளிவு மறைவுமில்லாத உண்மையின் வீச்சாகும்!
 
100 ஆண்டு நீதிக்கட்சியின் நீட்சி இவ்வாட்சி.  நீட்சி மட்டுமல்ல, திராவிடத்தின் மீட்சியும்கூட!
 
புகழுரைகள், குறைகூறும் விமர்சனங்கள் இரண்டையும் சமன்செய்து சீர்தூக்கும் கோலாக எண்ணி, தனது ஆட்சி என்ற வயலுக்கு அளிக்கப்படும் உரங்கள் என்றார் - பொருத்தமான உவமையும்கூட. வயலுக்கு நல்ல உரங்களும் போடப்படும்; கழிவுகளான வீணான உரங்களும் போடப்படும். இரண்டையும் உள்வாங்கியே பயிர் வளரும்!
 
‘திராவிடம் வெல்லும்‘ என்பதை விளக்கும் நாளும்!
 
எதிநீர்ச்சல், அதிலும் நெருப்பாற்றில் நீந்துதல் கலை - திராவிட ஆட்சியையும், திராவிடத் தலைவர்களின் வாழ்க்கை முறைகளையும் தக்க பாடங்களாகக் கற்றே - வெற்றி வாகை சூடி ஆட்சித் தலைவராகவும், அடக்கம் மிகும் ஆற்றலாளராகவும், திராவிடத்தின் மீட்சி வரலாற்றை எழுதத் தொடங்கிவிட்டார் - மக்கள் அவரோடு! காரணம், அவர் என்றும் மக்கள் பக்கம் - அதுதான் ‘திராவிடம் வெல்லும்‘ என்பதை விளக்கும் நாளும்!  என கூறியுள்ளார்.