காஷ்மீருக்காக போராடி கைதானேன்... ஃபேஸ்புக்கில் பகிர்ந்த வானதி சீனிவாசன்...

காஷ்மீருக்காக போராடி கைதானதாக வானதி ஸ்ரீனிவாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காஷ்மீருக்காக போராடி கைதானேன்... ஃபேஸ்புக்கில் பகிர்ந்த  வானதி சீனிவாசன்...
தமிழகத்தில் பாஜகவை பிரபலப்படுத்தியதில் வானதி சீனிவாசனுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பது நாடறியும், தொலைக்காட்சி விவாதங்களில் அவர் பாஜகவுக்காக வாதாடுவதில் இருந்து, பாஜக முன்னெடுக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் இவர் ற்றி வரும் பங்கு அளவிடமுடியாதது. 1988ல் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்தி பரிஷத்தின் செயல் உறுப்பினராக ஆரம்பித்த வாகதி சீனிவாசனின் அரசியல் வாழ்க்கை படிப்படியாக உயர்ந்து, பாரதிய ஜனதா மகளிரணி தேசியத்தலைவராக உயர்ந்தார்.
 
தமிழக பாஜகவில் ஒரு முக்கிய அங்கமாக மாறிய வானதி சீனிவாசன் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை தோற்கடித்து சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். சமீபத்தில் பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சரான பிறகு, தமிழக பாஜக தலைவராக இவருக்கு பொறுப்பு அளிக்கப்படுமா என்பது பலரது கேள்வியாக இருந்தது.
 
இந்நிலையில், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வானதி சீனிவாசன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றார். அவரது பயண விவரங்களை தற்போது அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,

இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தில் பிறந்த நான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருக்கிறேன். 1997ல் தனிப்பட்ட பயணமாக காஷ்மீர் வந்திருந்தேன். இப்போது முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் வந்திருக்கிறேன். 1990ஆம் ஆண்டு காஷ்மீர் காப்போம் என்ற மிகப்பெரிய போராட்டத்தை நாட்டின் மிகப்பெரிய மாணவர் இயக்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் முன்னெடுத்தபோது, கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நான் ஏவிவிபி ஏற்பாடு செய்திருந்த காஷ்மீர் மாநில மாணவர்கள் மற்ற மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்யும் நிகழ்ச்சியில் காஷ்மீர் மாணவர்களுடன் சுற்றுப்பயணம் செய்தேன்.
 
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது அரசியல் சட்டப் பிரிவை நீக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களில் இளம் வயதில் நான் பங்கேற்று, பாகிஸ்தான் கொடியை எரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானேன். அதற்கடுத்தநாள் சட்டக் கல்லூரி அட்மிஷனுக்காக சென்னை சென்ற என் நினைவுகளை ஜம்மு கூட்டத்தில் பகிர்ந்து கொண்டேன்.
 
எந்த  லட்சியத்திற்காக போராடினோமோ, அந்த லட்சியம் வெற்றி அடைந்த பிறகு நான் இப்போது காஷ்மீருக்கு பாஜக மகளிரணி தேசியத்தலைவராக ஜம்மு வந்திருப்பது என் அரசியல் வாழ்வில் நினைவில் நிற்கும் தருணம் என்று பதிவிட்டிருக்கிறார் வானதி சீனிவாசன்.