வால்பாறை: கொட்டித் தீர்க்கும் கனமழை..இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை..!

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

வால்பாறை: கொட்டித் தீர்க்கும் கனமழை..இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை..!

கர்நாடகாவில் கனமழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர மக்கள் கவனமுடன் இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபனி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. 

மேலும், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வர வாய்ப்புள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். இதனால் காவிரி கரையோர மக்கள் கவனமாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தற்போது, மேட்டூர் அணையிலிருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள கல்வடங்கம், காவேரிப்பட்டி, அண்ணமார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அண்ணமார் கோவில் பகுதியில் உள்ள சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் 10க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட கோழிகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே, மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமமான அளக்குடியில் மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்ந்து இன்று 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வர கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலை மேடு திட்டு, வெள்ளமணல், நாதல் படுகை ஆகிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் வந்து தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமும் 136 அடியை எட்டியுள்ளது. இதனால் இடுக்கி மாவட்டத்திற்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் முல்லைப் பெரியாற்றில் வரும் 10ம் தேதி வரை அணையின் நீர்மட்டத்தை 137 புள்ளி 50 அடியாக நிலை நிறுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.