தமிழகத்தில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

தமிழகத்தில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் உறுதியளித்தார்.

தமிழகத்தில்  10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவி, கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் மின் தடை ஏற்பட்டு வருவதாகவும்,  திமுக ஆட்சி என்றாலே மின்தடை ஆட்சி என்ற நிலைதான் உள்ளது என்றும், மின் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி உள்ளதாகவும்  சரமாரியாக குற்றம் சாட்டினார். 

இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் கட்டணம் வசூலிப்பதற்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும், அதில் எவ்விதமாக குளறுபடியும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தற்போது ஏற்பட்டு வரும் மின்தடைக்கு காரணம் கடந்த ஆட்சியில் மின்சாரத்துறையில் எவ்விதமான பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளபடாதது தான் என்றும், இதனை சரிசெய்யவே தற்போது தற்காலிகமாக மின் தடை ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இதற்கு கடந்த ஒரு மாதமாக இந்த அரசு என்ன செய்தது என கேள்வி எழுப்பியதோடு, கடந்த 9 மாதங்களாக மின் தடை இல்லை என்றும், இந்த ஒரு மாதமாக தான் மின்தடை உள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.

 தொடர்ந்து  விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது என்று சொல்கிறார்கள். ஆனால் 2 லட்சத்து 42 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்காமல் காத்திருக்க வைத்தது ஏன் என்று வினவினார். 

இதற்கு  எதிர்ப்பு  தெரிவித்து பேசிய முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி, மின்மிகை மாநிலம் என்பது சொந்த மாநிலத்திலே உற்பத்தி செய்து அடைவது அல்ல,  தேவையான மின்சாரத்தை பிற மாநிலத்தில் வாங்கி பயன்படுத்தப்பட்டது என்று கூறினார்.

தொடர்ந்து நடைபெற்ற காரசார விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய நீர்வளத்தறை அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்களின் கேள்விக்கு பதில் அளிக்க நேரம் அளித்துக்கொண்டே இருந்தால் அவையை நடத்தமுடியாது என்று கூறி விவாதத்தை முடித்து வைத்தார்.