பொறுப்புடன் செயல்பட என்ன காரணம்... உதயநிதி ஸ்டாலின் பேச்சு...

சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதி , ஜெ.அன்பழகன் விட்டுச்சென்ற பணிகளை முடிக்க வேண்டும்; அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றதால் பொறுப்புடன் செயல்படுகிறேன்.

பொறுப்புடன் செயல்பட என்ன காரணம்... உதயநிதி ஸ்டாலின் பேச்சு...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 3 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 2000 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். 

பொறியியல் ,கலை அறிவியல் உள்ளிட்ட பட்டப்படிப்பு பயின்றவர்கள் மட்டுமின்றி தொழிற்பயிற்சி முடித்தவர்கள்,  பள்ளிக்கல்வி மட்டும் பயின்றவர்கள் உட்பட பலரும் பங்கேற்ற இம்முகாமில் 126 தொழில் நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடைபெற்றது. பணிக்கு தேர்வானோருக்கான  பணி நியமன ஆணை இன்று மாலை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து வழங்கப்பட உள்ளது.

முகாமினை தொடங்கி  பேசிய உதயநிதி ஸ்டாலின்,

" என்னை சேப்பாக்கம் தொகுதியின் செல்லப் பிள்ளை என்று சொல்கிறார்கள்.. தேர்தலின்போது 4 நாள் மட்டுமே தொகுதியில் பிரச்சாரம் செய்தேன், கட்சி நிர்வாகிகள் எனக்காக உழைத்து, பெரிய வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்ததால் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறேன். அமைச்சர்கள் கணேசன், மகேஷ் பொய்யாமொழி இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் நான் வழிகாட்டி என்று என்னை பாராட்டினாலும் மனதிற்குள் என்னை திட்டவே செய்வார்கள். காரணம் அவர்களின் தொகுதிக்கு அவர்களை செல்ல விடவில்லை என்று கோபம் இருக்கும்.

சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதி , ஜெ. அன்பழகன் விட்டுச்சென்ற பணிகளை நான்  முடிக்க வேண்டும்.தொகுதியில் ஒவ்வொரு நாளும் 300-400 மனுக்கள் வருகிறது. 

தமிழகத்திலேயே அதிகமான கொரோனா தடுப்பூசி சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில்  1 லட்சத்து 20 ஆயிரம் என்றளவில்   போடப்பட்டுள்ளது. கருணாநிதியின் மறு உருவமாக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இன்று மாலை உங்களுக்கான பணி நியமன கடிதத்தை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து வழங்க உள்ளோம் " என்று பேசினார். மேலும் இந்நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , சி.வி.கணேசன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.