2000 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள்... தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுப்பு...

2000 ஆண்டுகள் பழமையான  குறியீடுகளுடன் ஆன கருப்பு சிவப்பு பானை ஓடுகளை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது.

2000 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள்... தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுப்பு...
ராமநாதபுரத்திலிருந்து நயினார்கோயில் செல்லும் சாலையில் உள்ள  குளத்தூர் கிராமத்தின்  காலனியின் கிழக்கே காரான்கோட்டை என்ற இடத்தில் பண்ணைக்குட்டை தோண்டியபோது, பானை ஓடுகள் வெளிவந்துள்ளன. இதனைத்தொடர்ந்து அவ்விடத்தில்   ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் இராஜகுரு, குளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் பால்துரை, தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் காவ்யா, பர்ஜித்,தனபால், ரஞ்சித் ஆகியோர் கள மேற்பரப்பாய்வு செய்தனர். ஆய்வு முடிந்த பின்பு அதனை கைப்பற்றினர்  இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்   இராஜகுரு நம்மிடம் கூறும்போது,
 
பண்ணைக்குட்டை தோண்டிய இடத்தில், கருப்பு சிவப்பு நிறத்திலான சுடுமண் தட்டுகளின் உடைந்த பகுதிகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத் தாதுக்கள், இரும்புக் கழிவுகள், தானியங்கள் வைக்க பயன்படுத்தப்பட்ட குலுமையின் தடித்த ஓடுகள், உடைந்த பானைத்தாங்கி, பானை மூடிகள்,அறிய வகை மான் கொம்புகள் மற்றும் 'த' என்கிற குறியீடுகளுள்ள 3 பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இதில் மூன்று கோடுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் திரிசூலம் போன்ற குறியீடு கீழடியிலும், மரியராயபுரத்திலும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘த’ எனும் தமிழ் எழுத்து, சூலம் ஆகிய குறியீடுகளும் கிடைத்துள்ளன.
 
இங்கு கிடைத்த மானின் உடைந்த கொம்புகள் உள்துளையுடன் உள்ளன. இது கிளைகள் உள்ள உழை மானின் கொம்புகள் ஆகும். இரும்புக் கழிவுகளுடன் உடைந்த உருக்காலையின் சிறிய பகுதியும் கிடைத்துள்ளதால் இங்கு இரும்பு உருக்காலை செயல்பட்டிருக்கலாம் என தெரிகிறது மேலும் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முன்பு இரும்புக்காலத்தில் காரான்கோட்டை என்ற பெயரில் ஒரு சிற்றூர் இங்கு இருந்ததை அறிய முடிகிறது. மருத்துவக் குணமுள்ள காரான் என்ற ஒரு பாரம்பரிய நெல்லின் பெயரில் இப்பகுதி அழைக்கப்படுகிறதுஇதேபெயரில் ரெகுநாதபுரம் அருகில் ஒரு ஊர் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.