துணி பாரம் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து!

தொப்பூர் கணவாயில் துணி பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துணி பாரம் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து!
Published on
Updated on
1 min read

தொப்பூர் கணவாயில் துணி பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் இருந்து துணி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று காலை மதுரைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த டிரைவர் வேல்முருகேசன் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் அதேபகுதியை சேர்ந்த மாற்று டிரைவராக ராமராசு என்பவர் உடன் வந்தார்.

இவர்கள் தொப்பூர் கணவாய் முதல் வளைவில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர்கள் 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து டிரைவர்கள் வேல்முருகேசன் மற்றும் ராமராசு ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com