தமிழ்நாடு அரசுத்துறைகளின் சாதனைகளை விளக்கும்...அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு...!

தமிழ்நாடு அரசுத்துறைகளின் சாதனைகளை விளக்கும்...அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு...!

Published on

இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு துறை சார்பில் ஊர்திகள் வலம் வந்தது.

மூவர்ண கொடியை ஏற்றிய ஆளுநர் :

நாட்டின் 74வது குடியரசு தினவிழாவையொட்டி, சென்னை மெரினா உழைப்பாளர் சிலையருகே குடியரசு தினவிழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, பி.டி.ஆர் பழனிவேல், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள்  கலந்துகொண்டனர். 

இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில்  மூவர்ணக்கொடியை ஏற்றி  ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார். அப்போது ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து முப்படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்று கொண்டார்.
சென்னை பெருநகர காவல் கூட்டுக்குழல் முரசிசை அணிவகுப்பு மற்றும் ஊர்க்காவல் படைப் பெண்கள் பிரிவினர் அணிவகுப்பும் இடம்பெற்றது. தொடர்ந்து ராணுவத்தின் படை வலிமையை வெளிப்படுத்தும் விதமாக இடம்பெற்ற மிடுக்கான அணிவகுப்பில், முப்படைகளைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. 

துறை சார்பில் வலம் வந்த ஊர்திகள் :

இதையடுத்து தமிழ்நாடு வாழ்க என்ற  வாசகத்துடன்  செய்தித்துறை அலங்கார ஊர்தி வலம் வந்தது. தொடர்ந்து, சுற்றுலாத்துறை, விளையாட்டுத்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை  உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகள் அரசு நலத்திட்டங்களை விவரிக்கும் வகையில் இடம்பெற்றன. 

பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் :

அதேபோன்று, தமிழ்நாட்டின் பல்வேறு பாரம்பரியங்களை பறைசாற்றும் மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், நாட்டுப்புற கலை நிகழச்சிகளும் குடியரசு தினவிழாவில் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஒன்றாக அமர்ந்து கண்டு ரசித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com