மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் வாக்குமூல வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தேனி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் வாக்குமூல வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் வாக்குமூல வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மதனகலா. கடந்த வாரம் கஞ்சா போதையில் அப்பகுதியில் உள்ள வீட்டில் திருட முயன்றதாக, மனநலம் பாதிக்கப்பட்ட மதுரையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட நிலையில், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர், தான் கஞ்சா வாங்குவதற்காக சாவியுடன் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை திருடியதாக சரளமாக சுத்த தமிழில் வாக்குமூலம் அளித்திருந்தார். 

இந்த வாக்குமூலத்தை தனது செல்போனில் படம் பிடித்த ஆய்வாளர் மதனகலா, அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில், அந்த வீடியோ வைரலாக பரவியது. மேலும் பொதுமக்கள் அளித்த திருட்டு புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், காவல்நிலைத்தில் வைத்து மனநலம் பாதிக்கப்பட்ட நபரை வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் பரப்பிய குற்றத்திற்காக, ஆய்வாளர் மதன கலாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தென்மண்டல ஐ.ஜி.அன்பு உத்தரவிட்டுள்ளார்.