பாலம் கட்டுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிப்பு...

வந்தவாசி அருகே சிறு பாலம் கட்டுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பாலம் கட்டுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து  துண்டிப்பு...

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மழையூர் - பெரணமல்லூர் செல்லும் சாலையில் சிறு பாலம் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. இந்தநிலையில் மாற்றுப்பாதையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வேடந்தாங்கல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.  மழையூர் - பெரணமல்லூர் செல்லும் சாலையில் உள்ள கிராமத்திற்கு சிறு பாலம் கட்டுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டு மாற்றுப் பாதை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் சிறு பாலம் கட்டி முடிக்காமல் கிடப்பில் உள்ளதால் தற்போது பெய்த தொடர் மழை காரணமாக சிறு பாலம் மற்றும் மாற்றுப்பாதை ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், வேடந்தாங்கல், மாணிக்கமங்கலம், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு வந்தவாசிக்கு வரும் பொதுமக்கள் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றிக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சிலிண்டர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் பள்ளி வாகனம் ஊருக்குள் வராததால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறு பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.