இரும்புப் பெண்மணியின் 5ம் ஆண்டு நினைவுநாள்...

இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவுநாள்

இரும்புப் பெண்மணியின் 5ம் ஆண்டு நினைவுநாள்...

தமிழக அரசியலில் ஒரு பெண் தனிப்பெரும் சாம்ராஜ்யம் நடத்தியவர்களின் தேடலுக்கு விடையாய் கிடைத்தவர்தான் ஜெயலலிதா. சிறு வயதில் இருந்தே முதன்மையானவராய் இருந்து வந்த ஜெயலலிதா, அவர் பயணித்த திரை வாழ்க்கையிலும், அரசியல் பாதையிலும் முன்னணியில் திகழ்ந்தவர் ஜெயலலிதா. கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதியோடு தமிழக அரசியல் வரலாறு மாறும் என்று அதுவரை யாரும் நினைத்திருக்க முடியாது.

உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா மரணமடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விரைவில் குணமடைந்து திரும்ப வந்து விடுவார் என்று தொண்டர்களும், தமிழக மக்களும் நினைத்திருந்த நிலையில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றும் விதமாக, ஜெயலலிதாவின் மரணம் அமைந்து விட்டது. அ.தி.மு.க. தொண்டர்கள் என்பதையும் தாண்டி, பொதுமக்களின் மனதை கனக்க வைத்தது. துக்கம் தாளாத தொண்டர்கள், அம்மா அம்மாவென்று கதறி சோகத்தை வெளிப்படுத்தினர்.  

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு என்று அறிவித்ததில் இருந்து பல்வேறு தடைகளைத் தாண்டி வீரநடை போடும் ஜெயலலிதா பல வெற்றிகளை தனதாக்கிக் கொண்டவர். திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பெண் முதல்வராக அதிக ஆண்டுகள் ஆட்சிபுரிந்தவர். அ.தி.மு.க. என்ற கட்சியை வழிநடத்துவதில் இரும்புப் பெண்மணியாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்.

தமிழகத்தை ஆண்டு வந்த ஜெயலலிதா தமிழகத்தில் அதுவரை யாருமே புரியாத பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவர். ஒரு சிங்கம் வந்தாலும் யானைக்கூட்டமே நடுங்கிப் போகும். அவ்வாறுதான் ஜெயலலிதா என்ற ஒற்றைச் சொல் எதிர்த்து நிற்போரை கதிகலங்கச் செய்தது. சட்டமன்றத்தில் மட்டுமல்லாமல் பொது மேடைகளிலும் ஜெயலலிதாவின் பேச்சு கர்ஜனையாய் ஒலித்தது. ஏழை எளிய மக்கள் கனவிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத பல அற்புதமான திட்டங்களை செயல்படுத்தி அதிசயத்தை ஏற்படுத்தியவர்தான் ஜெயலலிதா. மேடைப்பேச்சுக்கள் என்றால் ஜெயலலிதாவின் பாணிதான் சிறந்தது எனலாம்.

ஆண்கள் மட்டுமே நீடித்த ஆதிக்கம் செலுத்தக்கூடிய அரசியலில் பிரகாசிப்பதில் பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருந்து வந்தது. ஆனால் எம்.ஜி.ஆரின் மரணத்தைத் தொடர்ந்து அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரன் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் அவருக்கு அடுத்தபடியாக, ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா 1991, 2001, 2002, 2011, 2016-ம் ஆண்டு காலகட்டங்களில் முதல்வராக பதவி வகித்தன் மூலமாக தமிழகத்தில் அதிக முறை முதல்வராக பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் ஜெயலலிதா. ஒரு பெண்மணியாக அரசியலில் பல்வேறு இன்னல்களை சந்தித்திருந்தாலும் முதல்வராக இருந்த சமயத்தில் மக்களுக்கு பல்வேறு வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக, பெண்களுக்கும், பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் மகத்தான பல திட்டங்களை செயல்படுத்தி மகளிர் முன்னேற்றத்துக்கு ஏணியாக இருந்தவர்.

எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திச் சென்ற ஜெயலலிதா இன்று இல்லாவிட்டாலும், பலரது உள்ளங்களில் நினைவின் வழியாகவே வாழ்ந்துதான் வருகிறார். தமிழகத்தையே தன் வீடாக கொண்டிருந்த ஜெயலலிதாவை, தொண்டர்களும், மக்களும் அம்மா என்றே அழைப்பது வெறும் இதழிலிருந்து கூறிய வார்த்தைகளாக மட்டும் இருந்திருக்க முடியாது. ஜெயலலிதா இன்றளவும் மக்கள் மனதில் தலைவியாக, ஒவ்வொருவரின் இல்லத்திலும் உள்ளத்திலும் அரியாசனம் இட்டு வீற்றிருக்கிறார். எல்லோர் இதயங்களிலும் தனிப்பெரும் மரியாதையை கொண்டுள்ள ஜெயலலிதா இந்தியாவிலேயே சிறந்த தலைவராக, இரும்புப் பெண்மணியாக திகழ்கிறார்.  ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான்.