திருநெல்வேலி - தென்காசி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி அடுத்த ஆண்டு முடியும் - அமைச்சர் எ.வ.வேலு

திருநெல்வேலி - தென்காசி இடையேயான 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு மே மாதத்தில் முடிவுறும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி - தென்காசி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி அடுத்த ஆண்டு முடியும் -  அமைச்சர் எ.வ.வேலு

சட்டபேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு,

தென்காசி - நெல்லை இடையே 45 கிலோ.மீட்டர், தொலைவுக்கு 4 வழிச் சாலை அமைக்கும் திட்டப்பணிகள் இரண்டு கட்டமாக ரூ.380 கோடி மதிப்பில் நடைபெற்று வருவதாகவும், முதற்கட்ட பணிகள் வரும் செப்டம்பரிலும், 2-ம் கட்ட பணிகள் அடுத்த ஆண்டு மே மாதத்திலும் முடிவுற்று, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார்.

அதே வழித்தடத்தில் கிராம சாலை திட்டத்தின் கீழ் புறவழிச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும்,  திருநீர்மலை - திருமுடிவாக்கம் இடையேயான 2 வழி சாலையில் நெரிசல் அதிகமாக இருப்பதால், அதை 4 வழி சாலையாக மாற்றுவதா? அல்லது அகலப்படுத்துவதா? என்பது குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

திருவாரூர் - மன்னார்குடி வழியாக முத்துப்பேட்டை வரை 24 கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், முழுமையாக நில எடுப்புப் பணிகள் முடிவுற்ற பின்னரே ஒப்பந்தப்புள்ளி கோரி பணிகள் தொடங்கப்படும் என்றும், மரங்களை வெட்டவேண்டியிருப்பதால் பல இடங்களில் சாலைப்பணிகள் தாமதமாகி வருவதாகவும், அதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மாநிலம் முழுவதும் உள்ள தரைப்பாலங்களை, உயர்மட்ட மேம்பாலங்களாக மாற்றி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ஒரிரு ஆண்டுகளில் அந்தப்பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என்றும், தேவையான இடங்களில் சாலைகளை விரிவாக்கம் செய்வது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, குரோம்பேட்டை- திருமுடிவாக்கம் சாலையை 4 வழிசாலையாக அமைப்பது குறித்தும் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு  தெரிவித்தார்.