ஆகஸ்ட் மாதம் வரை தான் டைம்.. ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. திமுக அரசு பெற்றுத்தரும் - அமைச்சர் சி.வி கணேசன் உறுதி!!

ஆகஸ்ட் மாதத்திற்குள் திமுக அரசு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் உறுதியளித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் வரை தான் டைம்.. ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. திமுக அரசு பெற்றுத்தரும்  -  அமைச்சர் சி.வி கணேசன் உறுதி!!

தொழிலாளர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த அவர்,

திமுக ஆட்சியில் வேலை வாய்ப்பிற்கு பஞ்சமில்லை என்றும், எத்தனை இளைஞர்கள் படித்தாலும் அத்தனை இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரப்படும் என்றார். மேலும்  ஆகஸ்ட் மாதத்திற்குள் திமுக அரசு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் எனவும் உறுதியளித்தார்.

மேலும், 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், இந்தாண்டு மட்டும் 89 சதவீத மாணவர்கள் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்ட கணேசன், அதில் 70% இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் பொருட்டு புதிதாக 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் தமிழ் மொழியில் வழங்கப்படும் எனவும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிதாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்க தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி தொகை 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், திருமண நலத்திட்ட உதவி தொகை இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் போன்ற பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் சிவி கணேசன்.