தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் இருக்கிறார்கள் :  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தின் வருவாய்த்துறை அமைச்சர் - மாவட்டக் கழகத்தின் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.  இல்லத்தில் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் இருக்கிறார்கள் :  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களின் பெயர்த்தி தீப்தி - விஷ்வக்சேனா ஆகியோரின் திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்திப் பேசினார். அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தின் வருவாய்த்துறை அமைச்சர்-மாவட்டக் கழகத்தின் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். இல்லத்தில் நடைபெறும் மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து, இந்த மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பேற்று மணவிழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்முடைய வீட்டுத் திருமணம் நடப்பதைப்போல எண்ணி நாமெல்லாம் கலந்துகொண்டு, இந்த நிகழ்ச்சியில் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.

இன்னொரு பக்கத்தில் - திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அந்தப் பிரச்சினைக்கெல்லாம் போக விரும்பவில்லை. அதில் நாம் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அவர்கள்தான் நம்மை அழிக்க முடிவு செய்திருக்கிறார்களாம். தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, தி.மு.க. அழிந்ததாக வரலாறு கிடையாது. எனவே அந்த உணர்வோடு நாம் இருக்கிறோம்.

இந்தத் திருமண நிகழ்ச்சிக்குப் பல்வேறு கட்சியின் தலைவர்கள், நம்முடைய தோழமைக் கட்சியைச் சார்ந்திருக்கும் தலைவர் பெருமக்கள், பல அரசியல் கட்சிகளைச் சார்ந்திருப்பவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள் எல்லாம் இங்கே வாழ்த்த வந்திருக்கிறீர்கள். "அனைவரின் சார்பில் நீ ஒருவனே வாழ்த்தினால் போதும்" என்று சொல்லி, இங்கே என்னை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். எனவே அவர்கள் அனைவரின் சார்பில் நான் மணமக்களை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் அடிக்கடி பல நிகழ்ச்சிகளில் சொன்னதுண்டு. நேரடியாகச் சொன்னதுண்டு. தென்பகுதியில் எல்லோரும் சொல்வார்கள், பெரிய மருது - சின்ன மருது என்று, அது போல பெரிய மருது – சின்ன மருதுவாக நம்முடைய கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்களும் - தங்கம் தென்னரசு அவர்களும் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

எனவே அந்த அளவிற்குத் திறம்பட கழகப் பணி ஆற்றிக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட குடும்பத்தில் இன்றைக்கு இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டாக்டர் அருண்குமார் அவர்கள், நம்முடைய கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவருடைய மருமகன் அருண்குமார் அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவரும் ஒரு நல்ல நண்பர் - இனிய தோழராக பழகக் கூடியவர்.

அவர் அடிக்கடி என்னிடத்தில் பேசுவதுண்டு - தொலைபேசியில் பேசுவதுண்டு - நேரடியாக என்னிடத்தில் வீட்டிற்கு வந்து பேசுவதுண்டு. ஏன் என்றால் என்னுடைய வீட்டிற்கு பக்கத்தில்தான் அவருடைய வீடும் இருக்கிறது. எனவே அடிக்கடி வந்து பேசுகிறபோது, நாட்டு நடப்புகளை எல்லாம் பேசுவார். எதார்த்தத்தை அப்படியே சொல்வார்.

எங்கெங்கு சரியில்லை - எங்கு நன்றாக இருக்கிறது என்றெல்லாம் தெளிவாக சொல்வார். அவர் சொல்லக்கூடிய கணக்கு சரியாக இருக்கும். தேர்தல் நேரத்தில் கூட, இந்த இடம் சரியில்லை, இந்த இடம் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கிறது - கொஞ்சம் கவனியுங்கள் என்று சொல்லிவிட்டு செல்வார். எதையும் சரியாகச் சொல்வார்.

அதுமட்டுமல்ல, என்னென்ன சினிமா நன்றாக இருக்கிறது என்று அதையும் சொல்லிவிட்டுச் செல்வார். அவர் சொல்வது சரியாக இருக்கும். அவர் சொன்னால் அந்த சினிமாவை நான் தட்டாமல் பார்த்துவிடுவேன். அந்த அளவிற்கு எதையும் எடைபோட்டுப் பேசக்கூடியவர் - எதையும் எடைபோட்டுச் செயலாற்றக்கூடியவர்.

அவருடைய இல்லத்தில் அவருடைய பேத்திக்கு, உமா மகேஸ்வரி – அருண்குமாருடைய புதல்வியாக இருக்கும் தீப்தி அவர்களுக்கு இன்றைக்கு இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த தீப்தி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்களுக்கு மட்டும் பேத்தி அல்ல. எனக்கும் பேத்திதான்.

காரணம் சிறுவயதில் இருந்தே நான் அவரைப் பார்த்துக் கொண்டிருப்பவன். அதேபோல் என்னுடைய தாயார் தயாளு அம்மாளுக்கு உடல்நிலைக் குறைபாடு ஏற்பட்டபோது, இலண்டனுக்கு அழைத்துச் சென்றபோது, அப்போது அருகில் இருந்த எல்லா சிகிச்சைகளுக்கும் துணைநின்று பணியாற்றியவர் டாக்டர் அருண்குமார் அவர்கள். நான் அதை நிச்சயம் என்றைக்கும் மறக்க மாட்டேன். அதற்காக என்னுடைய குடும்பத்தின் சார்பில் நான் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதனால்தான் நான் கொஞ்சம் உடல் நலிவுற்று ஓய்வில் இருந்தாலும், இந்தத் திருமணத்திற்கு எப்படியும் வரவேண்டும் என்ற அந்த நிலையில்தான் இன்றைக்கு இந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். அதனால்தான் பெருந்தன்மையோடு எல்லோரும், நாங்கள் எல்லாம் பேசவில்லை, நீ மட்டும் பேசி முடித்துவிடு என்று சொன்னார்கள். நான் இதை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லவில்லை.

இன்றைக்கு இயற்கைச் சூழல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு நிவாரணம் காண வேண்டிய ஒரு கூட்டம் கோட்டையில் நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்ச்சியை நான் செல்கிறேன். அதனால்தான் நான் மட்டுமே பேசிவிட்டு மணமக்களை வாழ்த்தி, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், “வீட்டிற்கு விளக்காக - நாட்டிற்கு தொண்டர்களாக” வாழுங்கள் என்று மணமக்களை மனதார வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்! இவ்வாறு அவர் உரையாற்றினார்.