தூத்துக்குடி: விதவை சான்று கோரி தீக்குளிக்க முயன்ற பெண்.. தடுத்து நிறுத்திய காவல்துறையினர்..!

ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் உறுதி..!

தூத்துக்குடி: விதவை சான்று கோரி தீக்குளிக்க முயன்ற பெண்.. தடுத்து நிறுத்திய காவல்துறையினர்..!

ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் கோரிய பெண்:

தூத்துக்குடி மாவட்டம் கீழமங்கலம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் பிச்சம்மாள். இவருடைய கணவர் முருகன் கடந்த 2018 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தனது மகளுடன் வாழ்ந்து வரும் பிச்சம்மாள் எந்த வித ஆதரவும் இல்லாததால் ஆதரவற்ற விதவைச் சான்று கோரி, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் மனு அளித்துள்ளார். 

மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி:

ஆனாலும் சான்று வழங்காமல் நான்கு ஆண்டுகளாக அலைகழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த பிச்சம்மாள், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்:

இதைப் பார்த்த, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர், அந்த பெண்ணிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினார். தொடர்ந்து, கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த பெண்ணிடம் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.