இது தான் ஒரே ஆயுதம்.. தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

சென்னை கே.கே. நகரில் இன்று நடைபெற்ற 23-வது தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் ப்ரியா ராஜன் கலந்துகொண்டார்.

இது தான் ஒரே ஆயுதம்.. தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அதனை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி  மட்டுமே ஒரே ஆயுதமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்த வார இறுதி நாட்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக நடைபெறாமல் இருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 23 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. 

குறிப்பாக சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 1600 தடுப்பூசி முகாம்கள் செயல்பட உள்ளது. கே.கே.நகரில் நடைபெற்ற 23-வது தடுப்பூசி முகாமினை அமைச்சர் மா.சுப்ரமனியன் மற்றும் சென்னை மேயர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம்  3 கோடியே 71 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனவும், தமிழகத்தில் தற்போது வரை 10 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.

தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடிமையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த தடுப்பூசி முகாம்கள் மாலை 7 மணி வரையிலும் செயல்பட உள்ளது. 

முன்னதாக சென்னை கே.கே.நகரில் தொடங்கிய தடுப்பூசி முகாமில் சென்னை மேயர் ப்ரியா ராஜன் கலந்துகொண்டார். மேயராக பதவி ஏற்றபின் அவர் பங்கேற்கும் முதல் அரசு நிகழ்ச்சி இதுவாகும்.