அரசு விரைவுப் பேருந்துகளில் விரைவில் வருகிறது இந்த வசதி !!

இந்த வசதி 10 நாள்களுக்குள் பயன்பாட்டுக்கு வரும். இதன் மூலம் நடத்துநருக்கும் பார்சலை எங்கு இறக்க வேண்டும் என தெளிவு கிடைக்கும்.

அரசு விரைவுப் பேருந்துகளில் விரைவில் வருகிறது இந்த வசதி !!

அரசு விரைவுப் பேருந்துகள்

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 300 கி.மீ-க்கு அதிகமான தொலைவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளின் பக்கவாட்டில் உள்ள சுமைப் பெட்டிகளை மாதம் மற்றும் நாள் அடிப்படையில் வாடகைக்கு விடுவதற்கான அறிவிப்பை போக்குவரத்துத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

இதையடுத்து ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இது வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது.குறிப்பாக திட்டம் தொடங்கிய முதல் நாளில் மட்டும் பல்வேறு இடங்களுக்கு 18 பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பார்சல் அனுப்பும் வசதி

இவ்வாறு சிறு, குறு வியாபாரிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் தங்களது பார்சல்களை அனுப்ப அரசு விரைவு பேருந்துகளில் உள்ள சுமைப் பெட்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அந்தப் பகுதியில் உள்ள விரைவு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் உள்ள கிளை மேலாளர்களை அணுகி, பார்சல்களை முன்பதிவு செய்து அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் திட்டத்தை மேலும் எளிமையாக்கும் வகையில், டிஎன்எஸ்டிசி செயலியில் பார்சல்களை முன்பதிவு செய்வதற்கான வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

முன்பதிவு

இதுகுறித்து விரைவு போக்குவரத்துக் கழக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, அரசு விரைவு பேருந்துகள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 25 முதல் 35 பார்சல்கள் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் சராசரியாக ரூ.9 முதல் ரூ.11 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி, ஓசூர், சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட நகரங்களில் அதிகளவு வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

அவர்கள் பன்னீர், பூ, இயந்திர உதிரி பாகங்கள், பனியன் துணிகள் போன்றவற்றை அதிகளவு அனுப்பி வருகின்றனர்.முதலில் பார்சல்களை அனுப்புவதற்கு பணிமனைகளில் முன்பதிவு செய்யுமாறு கூறியிருந்தோம்.பின்னர் பயணச்சீட்டு முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். இதில் சில சிக்கல்கள் உள்ளன. இதனால் முன்பதிவு நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில், அரசு விரைவு பேருந்துகளின் இருக்கையை முன்பதிவு செய்ய பயன்படும் டிஎன்எஸ்டிசி செயலியிலேயே பார்சல்களை அனுப்ப முன்பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

10 நாட்களில்...

இந்தச் செயலியில் முன்பதிவுக்கான கட்டணத்தையும் செலுத்திக் கொள்ள முடியும். இந்த வசதி 10 நாள்களுக்குள் பயன்பாட்டுக்கு வரும். இதன் மூலம் நடத்துநருக்கும் பார்சலை எங்கு இறக்க வேண்டும் என தெளிவு கிடைக்கும். பேருந்து புறப்படும் வரை பார்சல் முன்பதிவு செய்தவர் வராமல் இருந்தாலும், நடத்துனரே செயலி மூலம் வாடிக்கையாளரைத் தொடர்பு கொண்டு, பார்சலை எடுத்து வர அறிவுறுத்த முடியும். இதன் மூலம் காகித பயன்பாடு குறைவதோடு, டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனையைக் கையாள முடியும் என கூறினார்.