தமிழ்நாட்டில் பின்தங்கிய மாவட்டம் என்று எதுவும் இருக்கக்கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு இந்தியாவில் தன்னிகரற்ற மாநிலமாக வேண்டும் என்றும்  பின்தங்கிய மாவட்டம் என்று எதுவும் இருக்கக்கூடாது என்றும் முதலமைச்சர் மு.கஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பின்தங்கிய மாவட்டம் என்று எதுவும் இருக்கக்கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீரான மேம்பாடு அடைந்த பகுதிகளாக மாறவேண்டும் என்றார். பின்தங்கிய சமூகம், பின்தங்கிய மக்கள் என்று யாரும் இருக்கக்கூடாது என்ற வகையில்  நிலையான வளர்ச்சியை தமிழ்நாடு அடையவேண்டும் என்றும் அதற்கான திட்டமிடுதல்கள் ஒவ்வொரு துறையிலும் தேவை என்றும்  முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சியாக இருக்க வேண்டும் எனவும்  மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு, தமிழ்நாடு அரசு செல்ல வேண்டிய பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழவேண்டும்’ என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.

 முன்னதாக இக்கூட்டத்தில் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், இந்தக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும், பல்வேறு திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இந்தக் கூட்டத்தில், அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும்  அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.