நிற்பதற்கு கூட இடமில்லை..! 

நிற்பதற்கு கூட இடமில்லை..! 

பல ஏக்கரில் கட்டப்பட்டு பயன்படாமல் இருக்கும் அரசு கட்டிடங்கள் இருக்கும் போது, நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டு உள்ளது ஒரு அங்கன்வாடி மையம்.

சாலை விரிவாக்கத்திற்க்காக கட்டிடம் இடிப்பு:

சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் சதானந்தபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இரண்டு வயதிற்கு மேற்பட்ட 30 குழந்தைகள் பயின்று வரும் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. பெருங்களத்தூர் முதல் மப்பேடு வரையிலான ஆறு வழிச்சாலை விரிவாக்க பணிக்காக அங்கன்வாடி இயங்கி வந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. அங்கன்வாடி நடித்த கட்டிடம் இல்லாத காரணத்தினால் ஒரு சில மாதங்களாக அங்கன்வாடி நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

1,000 ரூபாய் வாடகை: 

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக அங்கன்வாடிக்கு அரசு கட்டிடங்கள் இல்லாத நிலையில்  ஒரு அங்கன்வாடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வாடகை கொடுக்கப்பட்டு வருவதாகவும் அதன் அடிப்படையில் சதானந்தபுரம் பகுதியில் ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு கிடைக்கும் கட்டிடத்தில் அங்கன்வாடியை நடத்துமாறு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதால் அதன் அடிப்படையில் சதானந்தபுரம் பகுதியில் ஒரு  சிறிய அளவிலான வீடு எடுத்து இந்த அங்கன்வாடியை நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தள்ளப்பட்டனர் .

மேலும் படிக்க: ஆளுநர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்  : ஆனால் ஒரு சார்பில் கருத்து சொல்லக்கூடாது - நல்லக்கண்ணு

குழந்தைகளும், அடுப்பும் ஒரே அறையில்;

குழந்தைகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக வழங்கப்படும் காலை சிற்றுண்டி மதிய உணவு மற்றும் ஊட்டச்சத்து மாவு போன்ற உணவு வகைகளை சமைப்பதற்கும் அதே அறையினை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது எரிவாயு சிலிண்டர் சமையல் பொருட்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் 8அடி6 அங்குலம் என்ற அளவு கொண்ட ஒரு சிறிய அறையில் வகுப்பினை நடத்த வேண்டிய அவல நிலை உள்ளது.

விளையாட இடம் இல்லை:

அது மட்டுமின்றி அங்கன்வாடிக்கு செல்லும் பாதையானது முற்றிலும் செடி கொடிகள் படர்ந்து குழந்தைகள் விளையாடவோ, நடக்கவோ   போதிய இடம் இன்றி இருக்கும் அவல நிலையில் அங்கன்வாடி ஒரு ஆண்டுக்கு மேலாக இயங்கி வருகிறது .

மேலும் படிக்க: கனல் கண்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி !!

கோரிக்கை:

பெரும் அசம்பாவிதமோ விபத்துகளோ  ஏற்படுவதற்கு முன்னர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் மற்றும் பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்து முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆரம்ப கால பள்ளியினை உரிய பாதுகாப்புடனும், தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.