கோடை கால மின் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது - செந்தில் பாலாஜி உறுதி!

கோடை கால மின் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது - செந்தில் பாலாஜி உறுதி!

கோடை கால மின் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மின் தேவைகளை பூர்த்தி செய்ய டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை சின்னியம்பாளையத்தில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெறவுள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணம் நடத்தி வைப்பதோடு நான்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். இதனையொட்டி திருமண விழா நடைபெறும் இடத்தில், நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் தொடக்கம் என்று கூறினார். 

இதையும் படிக்க : ஈரோடு கிழக்கு : முறைகேடுகளுக்கு கிடைத்த வெற்றி - ஜி.கே.வாசன் பேட்டி!

தொடர்ந்து காரைக்குடி அருகே ஒரு கிராமத்தில் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, வருவாய்த்துறை ஆவணங்கள் சரியாக இருந்தால் 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும், ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் மட்டுமே மின் இணைப்பு வழங்குவதற்கான ஆவணங்கள் அல்ல என குறிப்பிட்ட செந்தில் பாலாஜி, வருவாய்த்துறை ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் மின் இணைப்பு  வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களான கோடை காலங்களில் மின் தேவையை பூர்த்தி செய்ய 4,200 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டுள்ளதால், இதற்காக டெண்டர் கோரப்பட்டு அதையும் இறுதி செய்து பணிகள் துவங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். எனவே, கேடைக்கால மின் விநியோகத்தில் எந்த வித பாதிப்பும் இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.