தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என புகார்...

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என புகார்...

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு கடலூர் மற்றும் வேலூரில் 5 பேர் உயிரிழந்த நிலையில், போதிய சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தொடர்ந்து, தற்போது கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மேட்டுத்தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல், கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த ராஜேஸ்வரி மற்றும் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேப்பூரைச் சேர்ந்த ரவிக்குமார் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், நேற்ரு ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் கருப்பு பூஞ்சை நோயால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
  
அதேபோல், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில், ஒரே நாளில் தனியார் கல்லூரி ஆசிரியர் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களைத் தாக்குவதாகக் கூறப்படும் இந்த நோய், கொரோனா பாதிப்பு இல்லாதவர்களையும் தாக்குவதாகவும், இதற்கு தேவையான ஊசிகள் மாவட்டங்களில் கிடைக்காததால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கும் பொதுமக்கள், தமிழக அரசு உடனடியாக கரும்பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தேவையான ஊசிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.