ஈபிஎஸ் முறைகேடுகளுக்கு ஆதாரங்கள் இருக்கு...அறப்போர் இயக்கத்தினர் பதில் மனு..!

ஈபிஎஸ் முறைகேடுகளுக்கு ஆதாரங்கள் இருக்கு...அறப்போர் இயக்கத்தினர் பதில் மனு..!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக, அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈபிஎஸ்க்கு எதிராக வழக்கு:

கடந்த 2016 முதல் 21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, 
அறப்போர் இயக்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி  புகார் அளித்தது. பின்னர், இது தொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தது.

மானநஷ்ட வழக்கு:

அறப்போர் இயக்கத்தின் சார்பில் தொடரப்பட்ட இந்த புகா,ர் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்சம் கேட்டு அறப்போர் இயக்கம் மீது எடப்பாடி பழனிசாமி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

பதில் மனு தாக்கல்:

எடப்பாடி தொடர்ந்த மான நஷ்ட வழக்குக்கு,  அறப்போர் இயக்கம் சார்பில் இன்று  பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், விதிமுறைகளை பின்பற்றாமல் டெண்டர் வழங்கப்பட்டதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் அளிக்கப்பட்ட புகாரை  சமூக வலைதளங்களில் வெளியிட்டது அவதூறு இல்லை எனவும் அறப்போர் இயக்கத்தின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று, டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதில் ஒரு தரப்பினருக்கு சாதகமாக செயல்பட்டுள்ளதாகவும் பதில் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளதால், மான நஷ்ட ஈடுக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் அறப்போர் இயக்கத்தின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு வரும் 23ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து  கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.