சிறுமிக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை...! சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள்...!

சிறுமிக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை...! சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள்...!
Published on
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கிளியனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். ஆட்டோ ஓட்டுனரான இவரது மகள் சஞ்சனா (5) தைலாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உப்புவேலூர் அரசு மருத்துவமனையில் ஊழியராக பணிபுரியும் ஈச்சங்காட்டைச் சேர்ந்த கணேசன் என்பவரிடம் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.  

இந்நிலையில் சிகிச்சைக்குப் பின்பு சஞ்சனாவின் உடல் கருமையாக மாறி உள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சனாவின் பெற்றோர்  தைலாபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தற்போது சஞ்சனாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 
சஞ்சனாவின் தந்தை சுகுமார், கிளியனூர் காவல் நிலையத்தில் தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் தனது மகள் உயிருக்கு போராடி வருவதாகவும், தவறான சிகிச்சை அளித்த கணேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் கிளியனூர் போலீசார் தவறான சிகிச்சை அளித்த கணேசன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தவறான சிகிச்சை அளித்த கணேசன் மீது காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இதேபோன்று கணேசன் மீது சுகாதாரத் துறை மூலமாக துறை ரீதியான உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்று சஞ்சனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திண்டிவனம்- புதுவை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த கிளியனூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில்  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com