இடிந்து விழுந்த அரசு மாணவியர் விடுதி மதில் சுவர்... மழை நீர் விடுதிக்குள் புகுந்ததால் பரபரப்பு...

அவிநாசியில் பெய்த கனமழைக்கு, மாணவியர் விடுதியின் மதில் சுவர் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  

இடிந்து விழுந்த அரசு மாணவியர் விடுதி மதில் சுவர்... மழை நீர் விடுதிக்குள் புகுந்ததால் பரபரப்பு...

கடந்த சில நாட்களாக அவிநாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடும் வெயில் அடித்து வந்தது.  இந்நிலையில் நேற்று முன்தினம் சுமார் அரை மணி நேரம் கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் பிற்பகல் திடீரென மேகமூட்டம் காணப்பட்டு சிறிது நேரத்திலேயே அவிநாசி, ஆட்டையம்பாளையம், சூளை, மங்கலம் சாலை,மடத்துப்பாளையம் சாலை, வேலாயுதம்பாளையம், பழங்கரை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்த கனமழை காரணமாக சாலையோரங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை அரசினர் மாணவியர் விடுதியின் மதில் சுவர் சாய்ந்து விழுந்தது. மேலும் விடுதிக்குள்ளும் மழை நீர் மளமளவென புகுந்தது. இதனால் விடுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து குளம் போல காட்சியளித்தது. மூன்று மாணவிகள் மட்டுமே விடுதியில் உள்ளதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

உடனடியாக விரைந்து வந்த அவிநாசி பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் இடிந்து விழுந்த மதில் சுவரை அப்புறப்படுத்தி மழை நீரை வெளியேற்றினர்.