ED எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சோதனைகள் நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தது. அத்துடன் திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன் ஆஜராகும்படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை எனவும், மாநில அரசு விவகாரங்களில் அமலாக்கத்துறை தலையிடும் சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சாா்பில் வாதிடப்பட்டது. 

இதையும் படிக்க : "பாஜக அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கா் ஒட்டி வருகிறது" - அண்ணாமலை

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. கனிம வள சட்டம் மட்டுமல்லாமல், இந்திய  ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததன் மூலம், 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது எனவும் அமலாக்கத்துறை சாா்பில் குற்றம் சாட்டப்பட்டது. 

பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை இன்று ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அதன்படி, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.