கம்போடியாவில் பெண் வேடமிட்டு பலரையும் காதல் வலையில் வீழ்த்திய தமிழ்நாடு இளைஞரின் சோக கதை..!

கம்போடியாவில் பெண் வேடமிட்டு பலரையும் காதல் வலையில் வீழ்த்திய தமிழ்நாடு இளைஞரின் சோக கதை..!

கம்போடியா நாட்டில் வேலைக்கு சென்ற தமிழ்நாடு இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டு பலரையும் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். சீன வியாபாரிகள் தன்னை மிரட்டியதாக கூறும் இளைஞரின் கதை என்ன?

வெளிநாட்டு வேலை:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவைச் சேர்ந்த பிரபக்களூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் நீதிராஜன். கொரோனா காலகட்டத்தில் வேலையின்றி வீட்டிலேயே இருந்த ஒருவர், தனது பள்ளித் தோழன் மஹதீர்முகமது மூலமாக வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற தகவல் நீதிராஜனுக்கு தெரியவந்துள்ளது.

இரண்டரை லட்சம் ரூபாய்:

வெளிநாட்டு வேலையில் லட்ச லட்சமாய் பணம் சம்பாதிக்கலாம் என நினைத்த நீதிராஜன்,  தனது தோழனும், ஏஜெண்டுமான மஹதீர் முகமதுவிடம் தன்னையும் கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு ஒற்றைக்காலில் நின்றுள்ளார். இதையடுத்து வீட்டு பத்திரத்தை வைத்து கடனாக பெற்ற இரண்டரை லட்சம் ரூபாயை பள்ளித்தோழன் முகமதுவிடம் ஒப்படைத்தவருக்கு கம்பெனி விசாவுக்கு பதிலாக சுற்றுலா விசாவே கிடைத்துள்ளது. 

$3000க்கு விற்பனை:

மதுரையில் இருந்து ஆகாயமார்க்கமாக கம்போடியாவை அடைந்த நீதிராஜனை வரவேற்ற முகமது என்ற ஏஜெண்ட், அவரை வேறொரு கும்பலிடம் அழைத்துச் சென்றுள்ளார். சீனாவைச் சேர்ந்த மற்றொரு ஏஜெண்டிடம் மணிகண்டன் உள்பட 3 பேரை 3000 அமெரிக்கா டாலர்களுக்கு விற்று விட்டு மாயமானார் முகமது. 

இதையும் படிக்க: ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்கும் இபிஎஸ்..! பரபரக்கும் அரசியல் களம்..!

மாட்டிக்கொண்ட இளைஞர்கள்:

தங்கள் தாய்நாட்டைச் சேர்ந்த ஏஜெண்டின் துரோகத்தால் சீனர்களிடம் சிக்கிக் கொண்டனர் இளைஞர்கள். அவர்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று அங்கு நடந்துள்ளது. அவர்களை வாங்கிய ஏஜெண்டுகள், உங்களை அதிக பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விட்டோம். இங்கிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் நாங்கள் சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும் என துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

இலக்கு:

அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் உள்ள பணக்காரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் பேசச் செய்வதே அவர்கள் நிர்ணயித்த இலக்கு. பெண்கள் பெயரில் பல போலியான ஐ.டி.களை உருவாக்கிக் கொண்டு, பெண்களின் புகைப்படம், வீடியோவையும் அளித்து ஆபாசமாக பேசச் சொல்லி வற்புறுத்தப்பட்டுள்ளனர். 

தப்பிக்க திட்டம்:

டேட்டா என்ட்ரி வேலைக்காக சென்ற நீதிராஜன், முழுக்க முழுக்க பெண் போலவே பேசி பல்வேறு நாட்டு முக்கியப் புள்ளிகளை காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார். ஒரு நாளில் பாதி நேரம் ஆணாகவும், பாதி நேரம் பெண்ணாகவும் இருவேறு வேடங்களை ஏற்று வந்தவருக்கு மனசாட்சி உறுத்தவே தப்பியோடும் முயற்சியில் இறங்கியுள்ளார். 

தூதரகத்திற்கு தகவல்:

ஆனால் சீன வியாபாரிகளிடம் இருந்து தப்பிக்க முடியாமல் திணறிய நீதிராஜன் சிலரின் உதவியை நாடியதைத் தொடர்ந்து அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு ரகசியமாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்திய தூதரகம் கம்போடியாவில் உள்ள அந்த நிறுவனத்துக்கு சென்று மணிகண்டன் உள்பட மூன்று பேரை மீட்டு இந்தியா அனுப்பி வைத்துள்ளனர். 

நல்ல வேளையாக உயிருக்கு ஆபத்து இல்லாமல் சொந்த ஊருக்கு திரும்பியிருக்கும் நீதிராஜன், தன்னைப் போல யாரும் வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட வேண்டாம் என்றும், அதிலும் குறிப்பாக கம்போடியா பக்கம் தலை வைத்துக் கூட படுக்க வேண்டாம் என்று பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.