மயான கொட்டகை இல்லாததால் நடக்கும் அவலம்... கொட்டும் மழையில் இறந்த உடலை எரிக்கும் நிலை....

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே மயானக் கொட்டகை இல்லாததால் கொட்டும் மழையில் நனைந்தவாறு இறந்தவர் உடலை தகனம் செய்த கிராம மக்கள்.

மயான கொட்டகை இல்லாததால் நடக்கும் அவலம்... கொட்டும் மழையில் இறந்த உடலை எரிக்கும் நிலை....

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்பும் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகேயுள்ள பரவனூர் கிராமத்தில் கொட்டும் மழையில் நனைந்து கொண்டே படுதா பிடித்து இறந்தவர் உடலை தகனம் செய்த கிராம மக்கள், மயானக் கொட்டகை அமைத்து தருமாறு பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால் இன்றளவும் இந்த அவலம் நீடிப்பதாக  வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே  வீராக்கன் கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட  பரவனூர் மற்றும்  மகாராஜபுரம் பஞ்சாயத்திற்குட்பட்ட கடமங்குடி ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் இந்த இரண்டு கிராமங்களிலும் இதுநாள் வரை மயானக் கொட்டகையே அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கொள்ளிடக் கரையின் உட்புறமுள்ள ஆற்று படுகையில் திறந்த வெளி மயானத்திலேயே உடல்களை அடக்கம் செய்வது வழக்கம். இதனால் மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் இறந்த உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் தவித்து வந்த கிராம மக்கள் இது குறித்து பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று பரவனூர் கிராமத்தை சேர்ந்த சின்னையன் மனைவி சரோஜா என்ற பெண்மணி உடல் நலக்குறைவால் இறந்து போன நிலையில்  உறவினர்கள் அவரது உடலை தகனம் செய்ய ஆற்று படுகைக்கு எடுத்து சென்ற போது திடீரென மழை கொட்டியதால் செய்வதறியாது தவித்த அவர்கள் கொட்டும் மழையில் படுதாவை பிடித்தவாறு பிரேதத்தை தகனம் செய்துள்ளனர்.

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட இன்னமும் அடிப்படை வசதிகளான சாலை, மின்விளக்கு, மயானக் கொட்டகை கூட இல்லாமல் கொட்டும் மழையில் நனைந்து கொண்டே இறந்தவர் உடலை தகனம் செய்யும் அவலம் நீடிப்பது வேதனைக்குரிய செய்தியாகும்.