56 ஆண்டுகளுக்கு முன்பு திருடுப்போன கோவில் சிலை...! அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு...!

56 ஆண்டுகளுக்கு முன்பு திருடுப்போன கோவில் சிலை...! அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு...!

ராமேஸ்வரம் வட்டம், தங்கச்சிமடம் கிராமத்தில் உள்ள ஏகாந்த ராமசாமி கோயிலில் இருந்த பழமையான கந்தர்வ கிருஷ்ணா எனப்படும் நடனமாடும் கிருஷ்ணர்  சிலை உட்பட 3 க்கும் மேற்பட்ட சிலைகள் கடந்த 1966 ஆம் ஆண்டு திருடப்பட்டுவிட்டதாக கோயிலின் பொறுப்பாளர் நாராயணி கடந்த மாதம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காணாமல் போனதாக கூறப்பட்ட சிலைகளின் புகைப்படத்தை பாண்டிச்சேரியில் உள்ள இந்தோ-பிரென்ச் நிறுவனத்திடம் இருந்து  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பெற்றனர். ஏகாந்த ராமசாமி கோவிலில் கந்தர்வ கிருஷ்ணா, இரண்டு விஷ்ணு சிலைகள், ஸ்ரீதேவி, இரண்டு பூதேவி சிலைகள் உட்பட 6 சிலைகள் காணாமல் போயிருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து பெறப்பட்ட சிலைகளின் புகைப்படத்தை அடிப்படையாக வைத்து, உலகில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களின் இணையதளங்களை சோதனை செய்தபோது, அமெரிக்காவில் உள்ள இந்தியானா போலீஸ் என்ற அருங்காட்சியகத்தில் நடனமாடும் கிருஷ்ணர் சிலை இருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். 1966 ஆம் ஆண்டு ஏகாந்த ராமசாமி கோயிலில் இருந்து நடனமாடும் கிருஷ்ணர் சிலை திருடப்பட்டு அமெரிக்காவில் உள்ள இந்தியானா போலீஸ் என்ற அருங்காட்சியகத்திற்கு விற்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. 1200 - 1350 ஆம் காலகட்டத்தில் நடனமாடும் கிருஷ்ணர் சிலை உருவாக்க பட்டிருக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட நடனமாடும் கிருஷ்ணர் சிலையை உடனடியாக மீட்டு கொண்டு வரும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ஈடுபட்டு வருவதுடன், மீதமுள்ள 5 சிலைகளை கண்டுபிடிப்பதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். விரைவாக செயல்பட்டு நடனமாடும் கிருஷ்ணர் சிலையை கண்டுபிடித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு டிஜிட்டல் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை...! தமிழ்நாடு அரசு வெளியீடு..!