மேற்கு வங்க கடலில் அடுத்த 6 மணி நேரத்தில் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறக்கூடும்...

வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 6 மணி நேரத்தில் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க கடலில்  அடுத்த 6 மணி நேரத்தில் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறக்கூடும்...

நேற்று கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இது அடுத்த 6 மணி நேரத்தில் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறக்கூடும் என்றும், இந்த புயல் சின்னம் மேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை விசாகபட்டினம்-கோபால்பூர்க்கு இடையே கடக்க கூடும் எனவு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இதன் காரணமாக, கடலூர், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே இன்று மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும்,நாளை தென்  மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய  மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ள வானிலை மையம்,

நாளை மறுநாள், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 14 சென்டி மீட்டரும், மணப்பாறை மற்றும் சேரன்மகாதேவியில் தலா 11 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.