இனி மாதந்தோறும் கல்லூரி மாணவிகளுக்கு 1000 ரூபாய்...எப்போதிலிருந்து தெரியுமா?

கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற ஜீலை 15 ஆம் தேதி அமலுக்கு வரும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி மாதந்தோறும் கல்லூரி மாணவிகளுக்கு  1000 ரூபாய்...எப்போதிலிருந்து தெரியுமா?

திமுக அரசு பதவியேற்று கடந்த 7 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவுபெற்றது. இதனையடுத்து அன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில் ஒன்றாக அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி படிக்கக்கூடிய மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று கேள்வி எழும்பிய நிலையில், வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைபடுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் முன்னாள் முதல் அமைச்சர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளான ஜூலை 15 அன்று இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல்  6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கக்கூடிய அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் இந்த உதவித்தொகை கண்டிப்பாக கிடைக்கும்.

மேலும் இந்த திட்டம் மூலம் 3 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள் என்றும், இதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.