மாணவி ஸ்ரீமதியின் உடலை 4 பேர் தூக்கிச் செல்லும் காட்சி! - இதை முன்னரே வெளியிடாதது ஏன்? ஸ்ரீமதி தாய் சரமாரி கேள்வி

மாணவி ஸ்ரீமதியின் உடலை 4 பேர் தூக்கிச் செல்லும் காட்சி! - இதை முன்னரே வெளியிடாதது ஏன்? ஸ்ரீமதி தாய் சரமாரி கேள்வி

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை பள்ளி வளாகத்தில் 4 பேர் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமாக உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்திய விவகாரம் தொடர்பாக, ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதால் பள்ளி சூறையாடப்பட்டதுடன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன.

சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஜூலை 23ஆம் தேதி ஸ்ரீமதியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதன் ஒருபகுதியாக, ஜூலை 13-ஆம் தேதி அதிகாலையில் பள்ளியின் வாட்ச்மேன் உள்ளிட்ட 4 பேர் மாணவி ஸ்ரீமதியின் உடலை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சியை முன்னரே வெளியிடாதது ஏன்? ஸ்ரீமதி தாய் கேள்வி

இதனிடையே, அடுத்தடுத்து வெளியாகும் சிசிடிவி காட்சிகள் மகளின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருவதாக ஸ்ரீமதியின் தாயார் செல்வி தெரிவித்துள்ளார். ஏற்கனவே வெளியிடப்பட்ட காட்சிகளில் ஸ்ரீமதியை தூக்கிச் செல்லும் காட்சிகள் இல்லாத நிலையில் தற்போது இந்த காட்சிகளை வெளியிட்டது யார் ?, அதிகாலை காட்சிகள் வெளியாகி உள்ளது என்றால், இரவு நேரத்திற்கான சிசிடிவி பதிவு இல்லையா, ஸ்ரீமதி எத்தனை மணிக்கு விழுந்தாள் என்றும் அவர் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.