பலத்த காற்றினால் தூக்கிவீசப்பட்ட அரசு பேருந்து மேற்கூரை..!

ஓ..! இதுதான் டாப் கழண்டுறும் -னு சொல்றதோ..?
பலத்த காற்றினால் தூக்கிவீசப்பட்ட  அரசு பேருந்து மேற்கூரை..!
Published on
Updated on
1 min read

பழவேற்காடு பகுதியில் இருந்து பொன்னேரி வழியாக செங்குன்றம் செல்லும் அரசு மாநகர பேருந்து பலத்த காற்றின் காரணமாக பொன்னேரி அருகே  மேற்கூரை பெயர்த்து கொண்டதால் பயணிகள் கூச்சல் குழப்பம் :

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், செங்குன்றம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. கடந்த சில தினங்களாக காற்று வீசாமல் புழுக்க நிலை ஏற்பட்டு வெப்பம் அதிகமாகவும் அனல் காற்று வீசியும்  வந்த நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், தற்போது இந்த பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த, குளிர்ந்த சூறைக்காற்றானது வீசி வருகிறது. இதன் காரணமாக, மரங்கள், ஓலை குடிசைகள் உள்ளிட்டவைகள் பலமாக அசைய தொடங்கி சாலைகளில் புழுதி கிளம்பியது. இதனால்,  சாலையில் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இவ்வாறிருக்க, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் இருந்து பொன்னேரி வழியாக செங்குன்றம் செல்லும் 558பி அரசு மாநகர பேருந்து வந்து கொண்டிருந்தபோது,  காற்று பலமாக வீசியதால் அரசு மாநகர பேருந்தின் மேற்கூரை பிரித்துக் கொண்டு காற்றில்  பறந்து சாலையில் விழுந்தது. 

அப்போது, பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்து கூச்சலிடவே உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பேருந்தில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.  மேலும் கூறை பிய்த்துக் கொண்ட நிலையில் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் மேலே விழாமல் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

இந்நிலையில் பலத்த காற்றின் காரணமாக தற்போது அரசு மாநகர பேருந்தின் மேற்கூரை பிரித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com