லாரியை வழிமறித்த கொள்ளையர்கள்- 6 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை...

ஒசூர் அருகே கண்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற சுமார் 6 கோடி மதிப்புள்ள செல்போன்களை மர்மநபர்கள் வழிமறித்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

லாரியை வழிமறித்த கொள்ளையர்கள்-  6 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை...

 காஞ்சிபுரம் பகுதியிலுள்ள ஒரு தனியார் செல்போன் கம்பெனியிலிருந்து 6 கோடி மதிப்புள்ள செல்போன்கள் ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு பெங்களுர் கொண்டு செல்லப்பட்டது. கண்டெய்னர் லாரி தமிழகத்தை கடந்து கர்நாடகா மாநிலம் கோலார் முளுபாகல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேவராயசமுத்ரா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது , அதனை வழிமறித்த மர்மகும்பல் ஒட்டுநர் மற்றும் அவரோடு இருந்தவர்களை தாக்கி கண்டெய்னர் லாரியிலிருந்த செல்போன்கள் அனைத்தையும் கொள்ளையடித்து மற்றொரு லாரியில் கடத்தி சென்றுள்ளனர். 

இந்த கொள்ளை சம்பவம் குறித்து கண்டெய்னர் லாரி ஒட்டுநர் மற்றும் அதிலிருந்தவர்கள் கர்நாடகா மாநிலம் முளுபாகல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், செல்போன்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்த தேவராயசமுத்ரா என்ற இடத்திலிருந்து சிறிது துரத்தில் உள்ள சுங்கசாவடியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் சோதனை செய்தனர். அதில் மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட ஒரு கண்டெய்னர் லாரி செல்லும் காட்சிகள் இருந்துள்ளது. எனவே கொள்ளையர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்காலம் என்றும் கொள்ளையடிக்கபட்ட செல்போன்களை அந்த லாரியில் ஏற்றி சென்றிருக்கலாம் என போலீஸாருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  அதன் அடிப்படையிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.