முதல்முறையாக கோவிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள்... கோவில் பூசாரி அருள்வாக்கால் தீர்ந்த பிரச்சனை... 

மதுரை மாவட்டம் செக்கானூரணி  அருகே பட்டியலின பூசாரியின் அருள்வாக்கால் பட்டியலின மக்கள் முதன்முறையாக கோவிலுக்குள் சென்ற நிகழ்ச்சி நடந்துள்ளது.

முதல்முறையாக கோவிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள்... கோவில் பூசாரி அருள்வாக்கால் தீர்ந்த பிரச்சனை... 
திருமங்கலம் அருகே உள்ள ஆனையூர் கொக்குளம் பேக்காமன் கருப்பசாமி கோவில் சாமி தரிசனத்திற்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களை அனுமதிக்கக் கோரி எழுந்த பிரச்சினையில் காலம் காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறைகளை மீறி கோவிலுக்கு வருபவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என அருள் வாக்கு கொடுத்த பூசாரியின் வாக்கினை ஏற்று கிராம மக்கள் கோவிலை திறந்து வைத்து கலைந்து சென்றனர்.
 
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனையூர் கொக்குளம் ஊராட்சிக்குட்பட்ட கொக்குளம், பாறைப்பட்டி, தேன் கல்பட்டி, ஒத்தப்பட்டி, சிக்கம் பட்டிஅய்யம்பட்டி உள்ளிட்ட ஆறு கிராமங்களுக்கு  சொந்தமான பேக்காமன் கருப்பசாமி கோவில் உள்ளது 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் ஊராட்சிக்கு சொந்தமான ஆறு கிராமத்து குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமானவர்கள் இருந்தாலும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்தான் பூசாரியாக இருந்து வருகிறார். 
கோவில் திருவிழா 21 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் கோவில் பூசாரியாக பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் பூசாரியாக இருந்தாலும் கோவிலுக்குள் சாமி தரிசனத்திற்கு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே செல்ல வேண்டும் எனவும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என காலம் காலமாக நடைமுறை உள்ளதாக தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த சிலர் தங்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு கிராம மக்கள் காலங்காலமாக இருக்கும் நடைமுறையை மாற்ற முடியாது என தெரிவித்ததால் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை கோவிலுக்குள் அனுமதி கோரி போராட்டம் நடத்தி கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவின் பேரில் திருமங்கலம் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும்வருவாய்த்துறை அதிகாரிகள், காவல் துறையினர் கிராம மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். 
 
கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து இந்து கோவில்களிலும் அனைத்து சாதியினரையும் அனுமதிக்க  வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, கிராம பெரியவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்க சாமியிடம் குறி கேட்பதாகவும் சாமி உத்தரவிட்டால் கோவிலுக்குள் செல்ல அனுமதிப்பதாக அதிகாரிகளிடம் கூறினர். இதையடுத்து நேற்று மாலை ஆறு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கோவிலை பூட்டி வைத்து கோவில்  வாசல் முன்பு அமர்ந்து  பேச்சுவார்த்தை நடத்தினர்.
அங்கு ஏதும் பிரச்சினை இல்லாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சில கிராம பெரியவர்கள் அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் அனுமதிக்க அரசு உத்தரவு உள்ளதால் நாம் பட்டியலினத்தவர்களை கோவிலுக்குள் அனுமதிப்பதா? வேண்டாமா? என தெய்வத்தின்  முன்பு பூப்போட்டு குறிகேட்போம் என கூறினர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். தொடர்ந்து கூச்சலிட்டு வந்த நிலையில் திடீரென கோவில் பூசாரியான பட்டியல் இனத்தைச் சேர்ந்த சின்னசாமிக்கு  அருள் வந்து ஆடினார். தொடர்ந்து கிராம மக்களிடம் கோவிலுக்குள் காலங்காலமாக இருக்கும் வழிமுறைகளை மீறி வருபவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் கூறியதை அடுத்து கிராம மக்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
 
இதனைத்தொடர்ந்து கோவிலை திறந்த அனைவரும் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கிராம பெரியவர் கோவிலுக்குள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களை அனுமதிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டு இருந்தாலும் கோவிலுக்கு வழக்கத்தை மீறி வருபவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற பூசாரியின் அருள்வாக்கு அந்த கருப்பசாமி வாக்காக  நம்பிக்கை அளித்துள்ளதாகவும், அதனால் கோவிலுக்கு வருபவர்களை தெய்வம் பார்த்துக் கொள்ளட்டும். இதுதொடர்பாக தாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்தார். கோவிலுக்குள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களை அனுமதிக்க கோரிய விவகாரம் பூசாரியின் அருள்வாக்கு மூலம் முடிவுக்கு வந்தது.