கஞ்சா வழக்கில் சிறையிலிருப்பவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவரானார்... 

செங்கல்பட்டு அருகே கஞ்சா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பிரபல ரவுடியின் மனைவி, ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா வழக்கில் சிறையிலிருப்பவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவரானார்... 

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குன்றம் ஊராட்சி தேர்தலில், ஒன்பதாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர் விஜயலட்சுமி.

பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் மனைவியான இவர் மீது கஞ்சா விற்றதாக வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த நிலையில், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியின்றி தேர்வானார்.

நேற்று முன் தினம் அவருக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது அங்கு வந்த போலீசார், விஜயலட்சுமியை பதவி ஏற்கும் மேடையிலேயே கைது செய்து அழைத்துச் சென்றனர்.  தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நெடுங்குன்றம் ஊராட்சி அலுவலகத்தில் துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் 14 வார்டு உறுப்பினர்கள் முன்மொழிந்த நிலையில் போட்டியின்றி விஜயலட்சுமி தேர்ந்தெடுக்கபட்டார். கஞ்சா வழக்கில் சிக்கிய ஒரு பெண், ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.