தக்காளி விலை கடும் வீழ்ச்சி.. உரிய விலை கிடைக்கவில்லை - தக்காளிகளை குப்பையில் கொட்டும் விவசாயிகள்!!

பொள்ளாச்சி அருகே தக்காளிக்கு  உரிய விலை கிடைக்காததால், வேதனை அடைந்த விவசாயிகள், பெட்டி, பெட்டியாக தக்காளியை குப்பையில் கொட்டிச் சென்றனர்.

தக்காளி விலை கடும் வீழ்ச்சி.. உரிய விலை கிடைக்கவில்லை - தக்காளிகளை குப்பையில் கொட்டும் விவசாயிகள்!!

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. கிணத்துக்கடவு தக்காளி மார்க்கெட்டில் பெருமளவிலான வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடமிருந்து, தக்காளிகளை, விலைக்கு வாங்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

தக்காளி விலை கடும் வீழ்ச்சி:

தக்காளியின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த சில மாதங்களாக, 15 கிலோ அளவு கொண்ட  ஒரு பெட்டித் தக்காளி, ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. ஆனால், இன்று, ஒரு பெட்டி தக்காளியின் விலை 50 ரூபாய்க்கும் கீழ் சென்றது. அத்துடன், கிணத்துக்கடவு மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வராததால், 50 ரூபாய்க்கு கூட தக்காளிகள் விற்பனை ஆகாவில்லை.

தக்காளிகளை குப்பையில் கொட்டிய விவசாயிகள்:

இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள், பெட்டி பெட்டியாக, தக்காளிகளை, குப்பையில் கொட்டிச் சென்றனர். ஏக்கருக்கு 75 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில், தக்காளிகள் விலை போகாததால், வேதனை அடைந்துள்ள விவசாயிகள்,  தமிழக அரசு தக்காளிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்னர்.