மனைவியின் சகோதரியை கொலை செய்த நபர்..! ஆயுள் தண்டனை குறைப்பு...!

மனைவியின் சகோதரியை கொலை செய்த நபர்..! ஆயுள் தண்டனை குறைப்பு...!

குடும்ப தகராறில் மனைவியின் சகோதரியை கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை பத்தாண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியை சேர்ந்த அண்ணாமலை, தனது மனைவி ராணியை தினமும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராணி தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், அவரை அழைத்து வர அண்ணாமலை ராணியின் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அப்போது, ராணியை அனுப்ப அவரது சகோதரி உமா ஆட்சேபனை தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அண்ணாமலை, நாட்டுத் துப்பாக்கியால் உமாவை நான்கு முறை சுட்டதில், சம்பவ இடத்திலேயே உமா உயிரிழந்தார். 2009 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த வேலூர் மகளிர் நீதிமன்றம், அண்ணாமலைக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து 2018 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. 

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஜி.சந்திரசேகரன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர், அண்ணாமலை கொலை செய்ததாக கூறப்படும் காரணத்தில் உண்மையில்லை எனவும் சாட்சிகளும் முறையாக இல்லை எனவும் வாதிட்டார். 

இதனையடுத்து, உமாவை திட்டமிட்டு அண்ணாமலை கொலை செய்யவில்லை என கூறி, அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை பத்தாண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிக்க : புதுச்சேரி : ஜி 20 விழிப்புணர்வு மாரத்தான்...! மாணவர்கள் பங்கேற்பு...!