’அயன்’ பட சூர்யா பாணியில் பணத்தை உடையில் மறைத்து எடுத்து வந்து போலீசாரிடம் மாட்டிக்கொண்ட நபர்..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், அயன் திரைப்படத்தில் வரும் சூர்யாவைப் போல, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உடையில் மறைத்து வைத்து, கொண்டு வரப்பட்ட 61 லட்ச ரூபாய் பணத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். 

’அயன்’ பட சூர்யா பாணியில் பணத்தை உடையில் மறைத்து எடுத்து வந்து போலீசாரிடம் மாட்டிக்கொண்ட நபர்..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புவனேஷ்வர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்திறங்கிய சந்தேகத்திற்கு இடமான இளைஞரை, காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில், 22 வயதான சாய் கணேஷ் என்ற அந்த இளைஞர், ராஜமுந்திரியில் இருந்து சென்னை வந்தது தெரியவந்தது.

மேலும், டி-சர்ட் மீது சட்டை அணிந்திருந்த அந்த இளைஞர், உள் பனியனுக்கு மேல், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உள்பனியன் போன்ற ஜாக்கெட்டில், கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்ததையும் கண்டறிந்தனர். 

தங்கம் வாங்குவதற்காக 61 லட்சம் பணத்தை சென்னை எடுத்து வந்ததாக சாய் கணேஷ் கூறிய நிலையில், எந்தவித ஆவணமும் இன்றி ரயிலில் கொண்டு வரப்பட்ட 61 லட்சம் பணத்தை, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சென்னையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1 கோடியே 85 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.