தேசியக் கொடி பறந்த காரில் செருப்பு வீசிய பா.ஜ.க.வின் கீழ்த்தர அரசியல் - திமுக கண்டனம் !!

காவல்துறை உரிய நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருப்பதால் திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டுகோள்

தேசியக் கொடி பறந்த காரில் செருப்பு வீசிய பா.ஜ.க.வின் கீழ்த்தர அரசியல் - திமுக கண்டனம் !!

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது பாஜகவினர் காலணி வீசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக, கட்சி தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவினரின் அருவருக்கத்தக்க, அரசியல் பண்பாடற்ற செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.  

ஊரெல்லாம் தேசியக் கொடி ஏற்ற வேண்டிய நேரத்தில், தேசியக் கொடி பறந்த காரில் செருப்பு வீசியதன் மூலமாக பா.ஜ.க.வின் கீழ்த்தர அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

திமுக ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள இயக்கம் - சட்டத்தின் ஆட்சியை கடைப்பிடிக்கும் இயக்கம் என்று குறிப்பிட்டுள்ள பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைச்சரின் கார்மீது காலணி வீசியவர்கள் - தூண்டி விட்டவர்கள் – துணைபோனவர்கள் ஆகியோர் மீது காவல்துறை உரிய நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருப்பதால் திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.