ஜோசியர் சொன்னதால் வீதியில் வீசிய முதியவர்... சிலைகள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் திருப்பம்...

குடும்ப உறுப்பினர்கள் பிரிந்து சென்றதால் ஜோசியர் அறிவுரைப்படி சிலைகளை வீசி சென்றதாக முதியவர் வாக்குமூலம் அளித்துள்ளது கோயில் வாசலில் 3 உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோசியர் சொன்னதால் வீதியில் வீசிய முதியவர்... சிலைகள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் திருப்பம்...

சென்னை ஜாம்பஜார் ஆறுமுகப்பா தெருவில் உள்ள முத்துமாரி அம்மன் கோவில் வாசலில் நேற்று பகல் 3 உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பாக தி.மு.க வட்டச் செயலாளர் செந்தில் குமார் ஜாம்பஜார் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிலைகளை மீட்டு விசாரணை நடத்தினர்.

குறிப்பாக சிலைகளை வீசிச் சென்ற நபர் யார் என அருகிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முதியவர் ஒருவர் உலோக சிலைகளை கோவில் முன் வீசிச் செல்வது போல் பதிவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த துளசி என்ற முதியவர் சிலைகளை வீசி சென்றது கண்டுபிடிக்கப்பட்டு அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் துளசி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக பூக்கடை தேவராஜ முதலித் தெருவில் பித்தளையால் ஆன 3 உலோச சாமி சிலைகளை வாங்கி அதை வைத்து வீட்டில் வழிபாடு செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், சிலைகளை வாங்கி வந்த நாளிலிருந்தே குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனைகள் நடந்து வந்ததாகவும், குடும்பத்தில் உள்ள அனைவரும் தற்போது தன்னைவிட்டு பிரிந்து சென்றதாகவும் முதியவர் துளசி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு 4 மகள்கள், ஒரு மகன் இருந்தும் யாரும் தன்னை கவனிக்காமல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

இதனால் பல வருடங்களாக மன உளைச்சலில் இருந்து கடைசியாக ஜோசியர் ஒருவரை சந்தித்து இதுபற்றி கேட்டபோது, இது போன்ற சாமி சிலைகளை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது எனவும், இதனை உடனடியாக அப்புறப்படுத்தினால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் எனவும் அவர் கூறியதால் அதனடிப்படையில் சிலைகளை கோவிலின் வாசலில் வைத்துச் சென்றதாக முதியவர் துளசி வாக்குமூலம் அளித்தார்.

எனினும் முதியவர் துளசி கூறிய வாக்குமூலத்தின் உண்மைத் தன்மை அறிய கைப்பற்றப்பட்ட உலோக சிலைகள் குறித்து தொல்லியல் துறைக்கு ஜாம்பஜார் போலீசார் தகவல் அளித்துள்ளனர். தொல்லியல் துறையின் முடிவைப் பொறுத்தே இந்த வழக்கின் முடிவு அமையும் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.