புதிய ஒளிப்பதிவு சட்ட வரைவை திரும்பப் பெற வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்...

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஒளிப்பதிவு சட்டவரைவை திரும்பப் பெற வேண்டுமென முதலமைச்சர் முக ஸ்டாலின், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புதிய ஒளிப்பதிவு சட்ட வரைவை திரும்பப் பெற வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்...

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரைவால் திரைப்படத்துறையை சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல், கருத்துச் சுதந்திரம் குறித்து அக்கறை கொண்டுள்ள சமூக ஆர்வலர்களும் கவலை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  

வலிமையான ஜனநாயகத்தில் புதுமையான படைப்புகளுக்கும், கலைத்துறையினருக்கும் போதிய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர்,ஆனால் தற்போது புதிய சட்டத்தின் மூலம் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றத் 
தால் நீக்கப்பட்ட மறு தணிக்கை செய்யும் அதிகாரத்தை  மீண்டும் அமல்படுத்த முயற்சி செய்வதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

புதிதாக தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை நிராகரிக்கவும், திரைப்பட தயாரிப்பின் போதே கட்டுப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளும் புதிய சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.இது 21-ம் நூற்றாண்டில் புதுமைகளை படைக்க விரும்புபவர்களின் குரல்வளையை நெரிக்கும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்

தற்போது ஒரு திரைப்படத்திற்கு தணிக்கைத்துறையின் சான்றிதழ் கிடைத்த பிறகு அதனை திரையிடுவது குறித்து முடிவெடுப்பதற்கான முழு அதிகாரமும் மாநில அரசிடம் உள்ளதை  சுட்டிக்காட்டியுள்ளார். புதிய சட்டம் மூலம் திரைப்படத்தை திரையிட முடிவெடுப்பதற்கான அதிகாரத்தை மாநில அரசு மற்றும் தணிக்கை துறையிடம் இருந்து பறிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது எனவும் குற்றம்சாட்டியுள்ளார். கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இத்தகைய சட்டங்களை இயற்றுவது ஜனநாயகத்தை பலவீனமாக்கும் செயல் எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் புதிய சட்டத்தில் வயது வாரியாக சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் கொண்டுவர உத்தேசித்துள்ள மாற்றங்களை அமல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு திரைப்படத்தை மறுதணிக்கை செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட முடியும் என்ற அம்சம் திரைப்பட தயாரிப்புத்துறையே ஆபத்தில் தள்ளிவிடும் எனவும் கவலை தெரிவித்துள்ளார். எனவே திரைப்படத் தணிக்கை சட்ட வரைவை திரும்பப் பெறுவதோடு தணிக்கைதுறை தொடர்ந்து சுயமாக இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என தனது கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.