பிறந்த குழந்தையை விட்டு சென்று மனம் கேட்காமல் மீண்டும் தேடி வந்த தாய் !!

மணப்பாறையில் மனம் ஏற்க மறுத்ததால் விட்டுச் சென்ற குழந்தையை தேடி வந்த தாய்.

பிறந்த குழந்தையை விட்டு சென்று மனம் கேட்காமல் மீண்டும் தேடி வந்த தாய் !!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தையை ஒரு துண்டை விரித்து அதில் வைத்து விட்டு குழந்தையின் தாய் சென்று விட்டார். கட்டடப்பணியில் இருந்த  தொழிலாளர்கள் குழந்தை கிடப்பதை பார்த்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு அளித்த தகவலின் பேரில் உடனே குழந்தையை எடுத்துச் சென்று அதற்கு தேவையான சிகிச்சை அளித்த பின்னர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் குழந்தையை விட்டுச் சென்ற பெண் யார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையில் மணப்பாறையை அடுத்த அம்மாசத்திரம் புதூரைச் சேர்ந்த தனலெட்சுமி வயது 25 என்ற பெண் இன்று காலை போலீஸ் நிலையத்திற்கு சென்று குழந்தை தன்னுடையது என்று கூறினார். அப்போது விசாரித்ததில் ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3வதும் பெண் குழந்தை பிறந்ததால் அவரின் கணவர் தமிழரசன் திட்டியதாக கூறப்படுகின்றது.

இதனால் கடந்த 18ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையை மணப்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று விட்டுச் சென்றதும், அதன் பின்னர் மனம் ஏற்க மறுத்த நிலையில் மீண்டும் நேற்றே மருத்துவமனைக்கு வந்து பார்த்த போது குழந்தை வைத்த இடத்தில் இல்லாமல் இருந்ததால் மீண்டும் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் இன்று காலை நாளிதழ்களில் வெளியான செய்தியை பார்த்து விட்டு மனம் பதறிப் போய் தன் குழந்தைக்கு இந்த நிலையா? என்று எண்ணி மீண்டும் அவரே போலீஸ் நிலையத்திற்கு வந்து குழந்தையை கேட்டதும் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.