பிறந்த குழந்தையின் முகத்தை பார்த்த மறுநாளே தாய் உயிரிழப்பு.....

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் காவலருக்கு ஏழு ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்தநிலையில், குழந்தையின் முகத்தை பார்த்த மறுநாளே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

பிறந்த குழந்தையின் முகத்தை பார்த்த மறுநாளே தாய் உயிரிழப்பு.....

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தா என்பவர், காவல்துறையில் தேர்வாகி தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு பாண்டியன் என்பவரை வசந்தா திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசந்தாவும் அவருடைய கணவரும் வாழ்ந்து வந்தனர். வசந்தாவுக்கு திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் கழிந்தநிலையில், கடந்த ஆண்டு இறுதியில் தான் அவர் கருவுற்றுள்ளார். 

 ஏழு மாதம் வரையில் காவல் பணிகள் செய்வதற்காக அலுவலகம் சென்று கொண்டிருந்தவர் அதன் பின்பு குழந்தை பெற்றுக்கொள்வதற்காக மகப்பேறுகால விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்துள்ளார். இதற்கிடையில் அவருக்கு திடீரென கடந்த மாதம் 28ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வசந்தாவிற்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.

நிறைமாத கர்ப்பிணி என்பதால் வசந்தாவை எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் வசந்தாவுக்கு தொடர்ந்து இருமல் மற்றும் மூச்சுத் திணறல் அதிகமாகவே, வயிற்றில் உள்ள குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்தால்தான் அவரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் ஒப்புதலுடன் நேற்று காலை அறுவை சிகிச்சை செய்து, அழகான பெண் குழந்தையை வசந்தா ஆரோக்கியத்துடன் பெற்றெடுத்தார். 

பின்னர் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் வசந்தா குழந்தையை பார்க்க வேண்டும் என உறவினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது மருத்துவர்கள் வசந்தாவிடம் குழந்தையை காண்பிக்க, தனது 7 ஆண்டு தவத்தின் பலனாய் பிறந்த பெண் குழந்தையைப் பார்த்து மிகவும் ஆனந்தம் அடைந்துள்ளார் வசந்தா. அதன்பின்னர் சிறிது நேரத்திலேயே வசந்தாவிற்கு மீண்டும் தொடர் மூச்சுத்திணறல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருக்கு மருத்துவர்கள் ஆக்சிஜன் வைத்து சிகிச்சை அளித்து அவரை உயிருடன் மீட்கும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும் வசந்தாவின் உடல்நிலை  சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் மிகவும் மோசமடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த வசந்தா இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.