சிறு வியாபாரிகளுக்கு புதிதாக கடைகளை அமைக்கும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்...!

சிறு வியாபாரிகளுக்கு புதிதாக கடைகளை அமைக்கும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்...!

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை வழிபடுகின்றனர்.

அதுமட்டுமின்றி விடுமுறை நாட்களில் திருவண்ணாமலைக்கு அதிக அளவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்து அண்ணாமலையாரை வழிபடுகின்றனர். பக்தர்களின் வருகை  நாளுக்கு நாள் அதிகரிப்பதால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது.

விடுமுறை நாட்களில் ராஜகோபுரம் முன்பு மற்றும் கோவிலின் மாட வீதி பகுதிகளில் அதிக அளவில் பக்தர்கள் கூடுவதால் கூட்ட நெரிச்சல் ஏற்படுகிறது. இதனால் கடந்த வாரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ராஜகோபுரம் மற்றும் மாட வீதியில் சுற்றி உள்ள சிறு சிறு கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இதனைத் தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு பூ, பழம்,தேங்காய் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கடைகள் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. ராஜகோபுரம் முன்பு வியாபாரிகளுக்கு கடைகள் அமைக்கக்கூடிய இடத்தினை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் ராஜகோபுரம் முன்பு பக்தர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக புதிதாக கழிவறை அமைக்கக்கூடிய இடத்தையும், பக்தர்கள் நடந்து செல்லும் வகையில் சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கடைகள் மற்றும் மற்ற கட்டுமான பணிகளை உடனே தொடங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் சி
என்.அண்ணாதுரை, கோவில் இணை ஆணையர் அசோகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.