பள்ளி மாணவன் மீது எப்படி கை வைப்பாய்...போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட பால்வியாபாரி கைது.!!

சென்னையில் பேருந்தின் மீது ஏறி ரகளையில்  ஈடுபட்ட மாணவனிடம் விசாரணை செய்த காவலரை  தாக்கிய பால் வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பள்ளி மாணவன் மீது எப்படி கை வைப்பாய்...போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட பால்வியாபாரி கைது.!!

சென்னை ஜே.ஜே நகர் முதல் பிராட்வே வரை செல்லக்கூடிய பேருந்தானது, நேற்று புரசைவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 10-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் மேற்கூரை மீது ஏறி தொங்கியபடி ரகளையில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர், கீழ்பாக்கம் கார்டன் சாலை அருகே பேருந்தை நிறுத்தி அங்கிருந்த டி.பி.சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வந்த போலீசார், ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை எச்சரித்தனர். மேலும் ஒரு மாணவரை மட்டும் பிடித்து விசாரணை செய்வதற்காக காவல்நிலையம் அழைத்து செல்ல முறபட்டதாக கூறப்படுகிறது.

இதனை கவனித்துக்கொண்டிருந்த அருகிலிருந்து நபர் ஒருவர் "எப்படி ஒரு மாணவனை காவல் நிலையம் அழைத்துச் செல்வாய்" என காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தான் காவலர் எனவும் மாணவனின் பெற்றோரை வரவழைத்து கண்டித்து அனுப்ப இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு அந்த நபர், நீ போலீசாக இருந்தால் பள்ளி மாணவன் மீது எப்படி கை வைப்பாய் என்று தகராறில் ஈடுபட்டு காவலரை தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் காவலரை தாக்கிய அந்த நபரை பிடித்து விசாரணை நடத்திய போது, செனாய் நகரைச் சேர்ந்த ஆனந்த்  என்பதும், பால் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.

இதனையடுத்து ஆனந்த் மீது ஆபாசமாக  பேசுதல், காயம் ஏற்படுத்துதல், பொது ஊழியரை கடமையை செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் டி.பி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ஆனந்தன் போலீசாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.