இடுகாட்டை பட்டாபோட்டு வாங்கிய தனிநபர்.. சடலத்தை அடக்கம் செய்ய மறுத்ததால் பொதுமக்கள் போராட்டம்.! 

இடுகாட்டை பட்டாபோட்டு வாங்கிய தனிநபர்.. சடலத்தை அடக்கம் செய்ய மறுத்ததால் பொதுமக்கள் போராட்டம்.! 

சடலத்தை அடக்கம் செய்ய இடம் தர மறுப்பதாக கூறி உடற்கூறு ஆய்வு  முடித்து சடலத்தை ஏற்றி வந்த அமரர் ஊர்தியை சாலையில் நிறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கல் குடியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் முன்னாள் அதிமுக ஒன்றிய குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். இவரது மகன் 21 வயதான மணிகண்டன் திருச்சியில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்த விராலிமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சடலத்தை அடக்கம் செய்வதற்காக ஏற்கனவே பல ஆண்டுகளாக அடக்கம் செய்து வந்த கல் குடியில் உள்ள இடுகாட்டில் சடலத்தை எரியூட்டு வதற்கான முன்னேற்பாடுகளை உறவினர்கள் இன்று மேற்கொண்டனர். 

அப்போது அவர்களை தடுத்த அப்பகுதியை சேர்ந்த செல்லமுத்து என்பவர் இந்த இடம் தனக்குச் சொந்தமான இடம் என்றும், இடத்தின் பட்டா என் பெயரில் உள்ளது என்றும், இதற்கு முன் இந்த இடத்தில் நீங்கள் சடலத்தை அடக்கம் செய்து இருக்கலாம், ஆனால் இனிமேல் இந்த இடத்தில் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று கூறி அவர்களை விட்டு அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய விடாமல் தடுத்து உள்ளார். 

இதனைத் தொடர்ந்து மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் 12 விராலிமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உடற்கூறு ஆய்வு முடிந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து மணிகண்டனின் உடலை அமரர் ஊர்தி மூலமாக அவரது சொந்த ஊரான கல்குடிக்கு கொண்டு சென்றனர்.  

அப்போது, விராலிமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வாகனத்தை மறித்து மணிகண்டனின் சடலத்தை வாகனத்தில் இருந்து இறக்க போராட்டக்காரர்கள் முயன்றனர். இதனைத்தொடர்ந்து சடலத்துடன் இருக்கும் வண்டியை நகர்த்த விடாமல் சாலை நடுவே நிறுத்தியும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு வட்டாட்சியர் சதீஷ் சரவணகுமார் சில மணி நேரமாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால்,  இடுகாடு தனிநபருக்கு பட்டா பதிவு செய்து கொடுத்ததை கண்டித்தும், அவருக்கு பட்டா பதிவு செய்து கொடுத்ததை கேன்சல் செய்து அந்த இடத்தை ஊர் பொது மக்களுக்கு இடுகாட்டுக்கு மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்விடம் வந்த கோட்டாட்சியர் தண்டாயுதபாணி மறியலில் ஈடுபட்ட நபர்களுடன் சமாதானப் பேச்சில் ஈடுபட்டு உங்கள் கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்ற தருகிறேன் என்று கூறினார். மேலும், திங்கட்கிழமை அந்த இடத்தின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இடத்தை அவர் பெயரில் இருந்து ரத்து செய்து தருகிறேன் என்று போராட்டம் உத்தரவாதம் அளிப்பதால் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

அதன்பிறகு இறந்த மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சடலத்தை எடுத்துக்கொண்டு கல் கொடியிலுள்ள அதே இடுகாட்டில் அவரை எரியூட்டி சென்றனர்.