”நாங்குநேரி சம்பவம் மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது” தமிழிசை செளந்தர்ராஜன்!

”நாங்குநேரி சம்பவம் மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது” தமிழிசை செளந்தர்ராஜன்!

சாதி வேற்றுமை உயிரை வாங்கும் அளவிற்கு இருக்கிறது என்பது வேதனை அளிப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், உலக அரங்கில் தமிழை உயர்த்திப் பிடித்தவர் பிரதமர் மோடி என கூறியுள்ளார். நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவம் மனதிற்கு மிகுந்த வேதனை தருகிறது என குறிப்பிட்ட அவர், இந்த சம்பவத்தை தீர ஆராய்ந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

நாங்குநேரி மாணவன் வெட்டப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மாணவன் மற்றும் அவரது தங்கை இருவரும் நெல்லை பல்நோக்கு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் மாணவன் மற்றும் அவரது தங்கையை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் மாணவர் சின்னத்துரையின் தாயார் அம்பிகாவதியிடம் தொலைபேசி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். மேலும், சிகிச்சை பெற்று வரும் மாணவர்களின் குடும்பத்திற்கு தி.மு.க .சார்பில் 2 லட்சம் ரூபாய் வழங்கபட்டது.

இதையும் படிக்க : "தமிழ் நாட்டில் எவ்வாறு பட்டியலினத்தவருக்கு எதிராக வெறுப்பு வளர்கிறது என்பதற்கு இது உதாரணம்" பா ரஞ்சித் ட்வீட்!!

இச்சம்பவம் குறித்து,  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாங்குநேரியில் சாதிய மோதலால் பள்ளி மாணவரையும், அதனை தடுக்கமுயன்ற அவரது சகோதரியையும், சக மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் உரிய கண்காணிப்புடன் மாணவர்களிடையே இத்தகைய மோதல்கள் நேரிடுவதற்கு காரணமான சூழல்களைக் கண்டறிந்து அவற்றைக் களையவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாசு, நாங்குநேரி அரசு பள்ளி மாணவர் சின்னத்துரை  அவரது வீட்டில் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டதும்,  அதை தடுக்க முயன்ற அவரது சகோதரி  சந்திரா செல்வியும் வெட்டுக்காயங்களுக்கு ஆளாகி உயிருக்குப் போராடுவதும் வேதனையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாகத் திகழ வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுக எம்.பி. கனிமொழி, திரைப்பட இயக்குநர்களான பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.